ஆர்.எஸ்.எஸ். ஷாகா நடத்துபவர்களுக்கான பயிற்சி முகாம்கள் நாடு முழுவதும் 90 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகின்றன. பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு விடுப்பு அளிக்கும் போது, அந்த வளாகங்களை தங்கள் தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்க ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்திக் கொள்கிறது. இந்த பயிற்சியில் பங்கேற்பவர்கள் தங்கள் எளிமையான உணவு, உடை போன்றவற்றிற்கு அவர்களே பணம் செலவளித்து பங்கேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.எஸ்.எஸ் சின் பண்பு பயிற்சி முகாம்களுக்கு மகாத்மா காந்தியடிகள், அண்ணல் அம்பேத்கர், ஜெயபிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள் பங்கேற்று அங்கு கற்றுத்தரும் பயிற்சிகள், யார் என்ன ஜாதி என்றே தெரியாமலும், ஏழை, பணக்காரர் என்ற வித்யாசம் இல்லாமலும் அனைவரும் சமமாக நடத்தப்படுவதைக் கண்டு அவர்கள் வியந்து பாராட்டியுள்ளனர்.
சட்டப்பூர்வமாகவும், இந்திய அரசியலமைப்புச்சட்டம் அளித்துள்ள உரிமையின் படி நடக்கும் ஆர்.எஸ்.எஸ்சின் பண்பு பயிற்சி முகாமிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பின் மாணவர் பிரிவான கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஆர்.எஸ்.எஸ் பண்பு பயிற்சி முகாமிற்கு தடை விதிக்கக்கோரி மனு அளித்தனர்.
பின்னர் இந்த கோரிக்கையை கோவையைச் சேர்ந்தவரும், இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடி வருபவருமான பெரியார் திராவிடக்கழகத்தின் கு.ராமகிருஷ்ணன் கையிலெடுத்து போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். கல்வி நிறுவன வளாகங்களில் ஆர்.எஸ்.எஸ் பண்பு பயிற்சி முகாம் நடத்தக்கூடாது என்று 20 பேருடன் போராடி கைதானார். இவரைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின 18 பேர் போராட்டம் நடத்தி, ஆர்.எஸ்.எஸ் முகாம் நடக்கும் பள்ளியை முற்றுகையிட முயன்றனர். தகவலறிந்த இந்து அமைப்பினர் அங்கு குவிய பதட்டம் ஏற்பட்டது. இதில், இரு தரப்பின் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு திராவிடர் கழக நிறுவனர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழையும், தமிழர்களையும் கடுமையாக விமர்சித்தவரின் பெயரை கல்வி நிறுவனங்களுக்கு வைத்தது ஏன் என்று யாரும் போராடவில்லை. கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத்தியில், மதப்பிரச்சாரம், அரசியல் பிரச்சாரம் நடப்பதும் உண்டு. தி.மு.க முன்னாள் முதல்வர் அண்ணா பெயரிலும் பல அரசு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பல அரசியல்கட்சிகளின் நிகழ்ச்சிகள், மத பிரச்சார நிகழ்ச்சிகள், ஜெபக்கூட்டங்கள் போன்றவை இதுபோன்று கல்வி நிறுவன வளாகங்களில் நடப்பது வழக்கமான ஒன்று
ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பண்பு பயிற்சி முகாம்களில் அதன் தொண்டர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். தனியார் கல்வி நிறுவனங்களில் வளாகங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இத்தனை ஆண்டுகள் இதற்கு எதிர்ப்பு இல்லாத நிலையில், முஸ்லீம் மாணவர் அமைப்பு ஒன்று எதிர்ப்பை கிளப்பி விடுவதும், அதை பின்தொடர்ந்து பெதிக, நாம் தமிழர் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்துவதும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் மத மோதல்கள் ஏற்பட்டதன் விளைவாகவே மக்கள் தி.மு.க ஆதரவு நிலையிலிருந்து விலகி அ.தி.மு.கவின் பக்கம் சென்றனர்.
தற்போது மீண்டும் கோவையில் மதமோதல்கள் ஏற்படும் சூழ்நிலையை ஏற்படுத்த சிலர் முயல்வதை முதல்வர் ஸ்டாலின் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
கு.ராமகிருஷ்ணன் மீது ஏற்கனவே இந்திய ராணுவத்தை பாலக்காடு பை பாஸ் சாலையில் தாக்கிய வழக்கு உள்ளது. அதை நடவடிக்கை எடுக்க முயற்சி செய்ய வேண்டும்.