உயர்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு நிரந்தர தீர்வா?

தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆட்சிப் பொறுப்பேற்றதும், அரசுப்பள்ளிகளின் கல்வித்தரம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. அதே வேகத்தில் தனியார் பள்ளிகளின் வளர்ச்சியும், தரமும் அதிகரிக்கிறது. தேர்தலை நடத்தும் அதிகாரிகளாக இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களின் தயவு தேவை என்பதை புரிந்து கொண்ட திமுக, அவர்களுக்கு சம்பளத்தை மற்ற அரசு ஊழியர்களை விட அதிகரித்தது. ஆனால் அதே சமயம் அவர்களின் வேலையின் தரம் குறித்து கேள்வி கேட்கப்படவில்லை. அரசு பள்ளி ஆசிரியர்களை ஒப்பிடுகையில் மிக குறைவான சம்பளம் வாங்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை அதிக மதிப்பெண்கள் பெற வைத்தனர். போட்டித்தேர்வுகளிலும் வெற்றியடையும் தகுதியை ஏற்படுத்தினர்.
ஆனால் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தாய் மொழி தமிழை பிழையின்றி கற்கும் வாய்ப்பைக் கூட பெற முடிவதில்லை. மாநிலத்தில் ஒன்றிரண்டு அரசுபள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சுய விருப்பத்தால் தரமான மாணவர்களை உருவாக்குகின்றனர். ஆனால் அவற்றின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

தனியார் பள்ளி மாணவர்களே உயர்கல்வி, வேலை வாய்ப்பு என்று அனைத்திலும் இடம்பிடிப்பதைக் கண்ட திமுக 2006 தேர்தல் அறிக்கையில் மாநிலத்தில் அனைவருக்கும் சமமான கல்வி கொண்டுவரப்படும் என்று அறிவித்தது. தேர்தலில் வெற்றி பெற்றதும் இதற்காக முனைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமையிலான ஒருநபர் குழு அமைத்தது. அவரும், இது தொடர்பாக ஆராய்வதற்கு கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு கல்வியாளர்கள் குழு நேரில் சென்று ஆய்வு செய்து அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம் சட்டப்பேரவையில் இயற்றப்பட்டது. அதன்படி மெட்ரிக்குலேசன், அரசு பள்ளிகள் அனைத்திற்கும் மாநில அரசே ஒரே மாதிரியான பாடப்புத்தகங்களை அச்சிட்டு வழங்கியது.

அந்தோ பரிதாபம், மேலே உள்ளவனோடு சமமான நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால், கீழே உள்ளவனை மேலே தூக்கி விட வேண்டும். ஆனால் சமச்சீர் கல்வி முறையோ மேலே உள்ளவனை கீழே இழுத்து தள்ளி சமப்படுத்தியது. விளைவு பொதுத்தேர்வுகளில் 150 க்கும் மேற்பட்டோர் முதலிடம் பிடித்தனர். இரண்டாம், மூன்றாம் இடங்கள், பாடங்களில் சென்டம் வாங்குபவர்கள் எண்ணிக்கை எல்லாம் ஆயிரக்கணகில் உயர்ந்தது. தாங்கள் ஏற்கனவே படித்துவந்த பாடத்திட்டங்களைவிட சமச்சீர் கல்வி முறையில் பாடத்திட்டங்கள் சுலபமாக இருந்ததால் இதிலும் தனியார் பள்ளி மாணவர்களே ஸ்கோர் செய்தனர்.

ஆனால் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் நடக்கும் உயர்கல்விக்கான போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வதில் சமச்சீர் கல்வி பயின்ற மாணவர்கள் திணறினர். இதனால் பல தனியார் பள்ளிகள் மத்திய அரசின் சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு மாறத்தொடங்கின. இதைத்தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்த அதிமுக அரசு தற்போதைய முதல்வர் ஸ்டாலினின் தனிச்செயலாளர்களில் ஒருவரும், ஐஏஎஸ் அதிகாரியுமான உதயச்சந்திரனை செயலராக கொண்டு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கும் குழு அமைத்தது. அந்த குழு புதிய பாடத்திட்டத்தை உருவாக்கியது. அதில் உள்ள சிறப்புகள் குறித்து அப்போது உதயச்சந்திரன் கூறியதாவது:

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கனவை நனவாக்கும் வகையில் இருக்கும். இந்தியாவின் தலைச்சிறந்த வல்லூர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
11 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.

நீட் உட்பட அனைத்து தேர்வுகளுக்கும் உதவும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 11 ம் வகுப்பில் இயற்பியலில் மெக்கானிக்கல் பாடப்பிரிவு செயல் விளக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது.
+2 பாடப்புத்தகத்தில், படிப்பிற்கு அடுத்து என்னப்படிக்கலாம் என்ற விவரமும் இருக்கிறது.

சிபிஎஸ்சி பாடப்புத்தகங்கள் 10 ஆண்டுகள் பழமையானது, இதில் பல போதாமைகள் இருக்கின்றன, இதை நிவர்த்தி செய்யும் வகையில் இருக்கும். மேலை நாடுகளில் இருந்து சிலவற்றை எடுத்து சேர்த்திருக்கிறோம்.

ஆசிரியர்களுக்கு விரிவான பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய திட்டம் தயாராக இருக்கிறது.
யாரை வைத்து பாடம் எழுதப்பட்டதோ அவர்களே ஆசிரியர்களுக்கு பாடம் எடுக்க திட்டமிட்டுள்ளோம்.
பாடத்தை எவ்வாறு நடத்துவது என வீடியோக்கள் இணையத்தில் அப்லோடு செய்யப்படும்.
தமிழ் பாடத்திட்டத்தில் நவீன இலக்கியம் உட்பட பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன.
ஐஐடி, ஜெஇஇ தேர்வில் தீர்வுகளை சரிப்படுத்தும் முறை, நம்முடைய படிப்பு தியரி சம்பத்தப்பட்டதாக இருந்தது. இதை இம்முறை மாற்றி இருக்கிறோம்.
ஐஏஎஸ் தேர்வு எழுதிய மாணவர்களின் நேர்காணல்களும் இடம்பெற்றுள்ளன.போட்டித்தேர்வுகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களின் ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன. குடிமைப்பணிகளுக்கு செல்பவர்களுக்கும் இது உதவும் என்றார் ( பாடத்திட்டங்களை மாற்றி அமைத்தபோது, தேசிய சிந்தனையை குறைக்கும் மாற்றங்கள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன).

ஒருவழியாக பாடத்திட்டம் சரி செய்யப்பட்டு மாணவர்கள் அவற்றை கற்று வந்தாலும், அரசு பள்ளி மாணவர்களின் தரம் உயர்ந்ததாக தெரியவில்லை. அதனால் அரசு பள்ளி ஆசிரியர்களின் பணிதரத்தை உயர்த்தாமல் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்காது என்கின்றனர் கல்வியாளர்கள். ஆனால் அதை செய்யாமல் மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அதிமுக அரசு வழங்கியதை பின்தொடர்ந்து, நுழைவுத்தேர்வு இல்லாத வேளாண்மை, பொறியியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அளித்து, அரசு பள்ளிகளில் தரம் இல்லை என்பதை தமிழக அரசு பகிரங்கமாக ஒத்துக் கொண்டுள்ளது. இத்தனைக்கும் அரசு பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் குறைந்தது ஆண்டிற்கு 55 ஆயிரம் ரூபாய் செலவிடுகிறது. அதாவது பெரும்பாலான தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட இது அதிகம்.

அரசு இடஒதுக்கீட்டில் உயர்கல்வி வாய்ப்பு பெற்றுச் செல்லும் அரசுப்பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களுடன் இணைந்து படித்து தேர்ச்சி பெறும் அளவிற்கு திறமை பெற்றவர்களாக இருப்பார்களா என்பது கேள்விக்குறி. இந்த ஒதுக்கீட்டு முறையால் உயர்கல்வியின் தரத்திற்கும் தமிழக அரசு வேட்டு வைத்திருப்பதாக கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு தரமான கல்வியை கற்பித்து, அவர்களை மற்ற மாணவர்களுடன் போட்டிபோடும் நிலைக்கு உயர்த்தினால் தான் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அத்தோடு பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடிச்செல்லும் நிலையும் மாறும்.

ஆனால் தேர்தல் வெற்றியையும், வாக்குவங்கியையும் மட்டும் கருத்தில் கொள்ளும் திராவிட கட்சிகள் அதை செய்யுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here