சிவனியம்..மாலியம் உண்மையா?

கேள்வி : அண்ணன் சீமான் தமிழர்களின் மதம் சிவனியம், மாலியம்னு சொல்றாரே? வரலாற்றின் பார்வையில் இப்படியொரு மதம் இருந்ததா???

பதில் : வரலாற்றில் சிவனியம், மாலியம் என்ற பெயரில் மதங்கள் இருந்ததாக தெரியவில்லை. ஆனால் காப்பியங்கள் மற்றும், சில பக்தி இலக்கியங்களின் துணைகொண்டு சைவம், வைணவம் என்ற பெயரில் மதங்கள் இருந்ததை சான்றுகளுடன் நிறுவலாம்.

கேள்வி : எனில் காப்பிய காலத்தில் தான் சிவ,மால் வழிபாடே தோன்றியதா?

பதில் : அந்த காலத்தில் தான் சைவம், வைணவம் என்ற பெயர்கள் கிடைக்கிறது. ஆனால் அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சிவ வழிபாடும், திருமால் வழிபாடும் இருந்தது என்பதற்கு பல இலக்கிய சான்றுகளும் தொல்லியல் சான்றுகளும் உள்ளன…!

கேள்வி : அந்த காலத்தில் சிவனுக்கும் மாலுக்கும் தனித்தனி கோவில்கள் இருந்ததா???

பதில் : ஆம். காப்பியங்களுள் முதன்மையான சிலப்பதிகாரத்தில்,

“பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்,அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும், வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்”

– சிலப்பதிகாரம்.

என்ற வரிகளின்மூலம் சிவன் கோவிலும் திருமால் கோவில் மட்டுமல்லாது முருகன், பலராமன் போன்ற தெய்வங்களுக்கும் கோவில்  இருந்ததை அறிய முடிகிறது. அதோடு அகநானூற்றின்,

“நெடுமால் வரைய குடிஞையோடு குன்று பின் ஒழியப் போகி “ 

– அகநானூறு

என்ற வரிகளின் மூலம் சங்ககாலத்திலேயே திருப்பதி கோவில் இருந்ததை அறிவதோடு புறநானூற்றின் ஒரு பாடலின் மூலம் சிவனுக்கும் சங்ககாலத்தில் கோவில் இருந்ததை அறிய முடிகிறது…!

“பணியிய ரத்தைநின் குடையே முனிவர் முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே”

– புறநானூறு.

கேள்வி : புறநானூறு இன்றிலிருந்து 2300 ஆண்டுகள் பழமையானது எனில் அதற்கு முன்பு சிவ, மால் வழிபாடுகள் தமிழகத்தில் இல்லையா?

பதில் : உண்டு. இன்றிலிருந்து 2700 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படும் தொல்காப்பியத்தில் சிவன், திருமால் பற்றிய குறிப்புகள் உண்டு.

தொல்காப்பியத்தில் சிவனா
என்று வியக்காதீர்கள். தொல்காப்பிய உரை ஆசிரியர்களில் ஒருவரான தெய்வச்சிலையார் தொல்காப்பியத்தின் சில வரிகளை மேற்கோளிட்டு இது சிவனையே குறிக்கிறது என்று கூறுவதை நச்சினார்க்கினியரும் அவரது உரையில் ஒத்த கருத்தை குறிப்பிடுகிறார் என்பதை இன்னொரு பதிவில் விரிவாக காண்போம்.)

– பா இந்துவன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here