ஒன்றியமல்ல பாரதம்! இது உயிர்துடிப்புள்ள தேசம்!! முதல்வர் ஸ்டாலினுக்கு கவர்னர் பதிலடி

The Governor of Nagaland, Shri R.N. Ravi calling on the Prime Minister, Shri Narendra Modi, in New Delhi on August 08, 2019.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தென்மண்டல பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் இரண்டு நாள் மாநாடு 11.3.2022 அன்று துவங்கியது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக பங்கேற்று பேசினார். அப்போது அவர், தேசிய அளவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பெற்றுவருகின்றன. தமிழ்நாடு உயர்கல்வியில் சிறந்து விளங்குகிறது. தேசிய அளவில் பள்ளி கல்வியை முடித்து உயர்கல்விக்கு செல்பவர்கள் 27.1 சதவீதம் தான். ஆனால் தமிழ்நாட்டில் 51.4 சதவீதம் பேர் உயர்கல்விக்கு செல்கின்றனர். தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கை விகிதம் தேசிய சராசரியைவிட இரண்டு மடங்கு அதிகம். மருத்துவ சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு சாதாரண நிலையில் உள்ளவர்களும் உயர வழி செய்துள்ளது. தொழற்கல்வி மற்றும் மருத்துவப்படிப்பில் நுழைவுத்தேர்வு கட்டாயம் என்பதை ஒழித்துக்கட்டிவர் கருணாநிதி.
கல்வி என்பது ஒத்திசைவு பட்டியலில் இருப்பதை வைத்து, ஒன்றியஅரசு(மத்திய அரசு) தனது அதிகாரத்தைப்பயன்படுத்தி பிற்போக்குக்கருத்துக்களை பாடத்திட்டங்களில் புகுத்தும் போக்கு கவலைக்குரியதாக இருக்கிறது. கல்வி முழுமையாக மாநில பட்டியலுக்கு மாற்றப்படுவதே இதற்கு தீர்வாக அமையும். மாநிலத்தில் உள்ள கல்விக் கொள்கையின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் விருப்பம். அதனை உணர்ந்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் செயல்பட வேண்டும் என்று பேசினார்.

மாநாட்டை துவக்கி வைத்து பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.

கல்வி என்பது தேசத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். அது தனித்து இருக்க வேண்டியதில்லை.

இளைஞர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் பணியில் பல்கலைக்கழகங்கள் ஈடுபட்டுள்ளன. எனவே நாட்டின் முன்னேற்றத்தில் துணைவேந்தர்களுக்கு அதிக பங்கு உள்ளது.

நம் நாட்டை 65 ஆண்டுகாலம் அந்நியர்கள் அளித்துச்சென்ற பார்வையின் படிபார்த்தோம். நாட்டின் வளர்ச்சிக்காக 5 ஆண்டு திட்டங்கள் போடப்பட்டன. அதன்படியே கல்வி, சுகாதாரம், வேளாண்மை போன்றவற்றிற்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன. 3 ஆண்டுகள் வரை அந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஆட்சி முடிவுக்கு வருவதை அறிந்தவுடன் அரசியல்காரணங்களால் இலவசங்கள் பக்கம் திரும்பிவிடுவார்கள்.

இதனால் நாட்டில் ஏழ்மை, கல்வியறிவின்மை, சுகதாரமின்மை போன்ற சீர்கேடுகளை ஒழிக்க முடியவில்லை.

நாட்டில் வளர்ச்சியில் சமமில்லாத நிலை ஏற்பட்டது. தென்மாநிலங்களுக்கும், வடமாநிலங்களுக்கும், மேற்கு மாநிலங்களுக்கும், கிழக்கு மாநிலங்களுக்கும் வளர்ச்சியில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு ஏற்பட்டது.

நம்நாடு அமெரிக்கா போன்று ஒப்பந்தங்கள் மூலம் மாநிலங்கள் இணைந்து உருவான நாடு இல்லை. நமது அரசியல் அமைப்புச்சட்டத்தில் யூனியன் ஆப் இந்தியா என்று சொல்வற்கு முன்பாக, இந்தியா என்றழைக்கும் பாரதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலங்களின் ஒன்றியமல்ல பாரதம். இது உயிர்துடிப்புள்ள தேசம்.

இது பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று தொன்மையான இலக்கியங்கள் கூறுகின்றன. வடக்கே இமயம் முதல் தெற்கே குமரி முனைவரை பாரதம் என்று வேதங்களில் கூறப்பட்டுள்ளது. நமது சங்க இலக்கியங்களிலும் கூறப்பட்டுள்ளது. பாரதியார் செப்பு மொழி 18 உடையாள் ஆனால் சிந்தனை ஒன்றுடையாள் என்று பாடியுள்ளார்.

இந்த நாட்டின் மக்களின் கலாச்சாரத்தில், பழக்க வழக்கங்களில், ஆன்மீகத்தில் ஒற்றுமை இருப்பதை காண முடியும்.

இந்த நாடு இயற்கையாகவே உருவான நாடு. இது வெறும் மண், கல் அல்ல. வாழும் உயிராகும். உடல் உறுப்புகள் போன்று இணைந்து உருவான நாடு. கண், காது, மூக்கு, வாய் என்று உடலின் உறுப்புகளின் தோற்றம், செயல்பாடு என்று அனைத்தும் வேறுபாடுடையவை தான். ஆனால் அவை தனித்து செயல்பட முடியாது. உடலில் இருக்கும் போது தான் செயல்பட முடியும்.

நாட்டில் வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்கள் இருப்பதைப்போலவே, மாநிலத்தில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்கள் உள்ளன.

தமிழகத்திலும் அதுபோன்ற மாவட்டங்கள் உள்ளன. வளர்ச்சியில் வேறுபாடு இருப்பது சகித்துக் கொள்ள முடியாதது.

2014 ம் ஆண்டில் பிரதமர் மோடி பதவியேற்ற பின்னர், நாட்டைப்பற்றிய கண்ணோட்டம் மாறியது. வளர்ச்சியில், முன்னேற்றத்தில் சமநிலையை ஏற்படுத்தும் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த கொள்கைகளில் பிராந்திய உணர்வுகளுக்கு, ஜாதி உணர்வுகளுக்கு, மொழி உணர்வுகளுக்கு இடமில்லை. 65 ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் ஏழ்மையை ஒழிக்கத்திட்டங்கள் தீட்டப்பட்டன.

அனைவருக்கும் வங்கி கணக்கு துவங்கப்பட்டது. 40 லட்சம் பேர் வங்கி கணக்கு துவங்கினர். அவர்களுக்கான பணம் ஒரு பைசா கூட சிதறாமல் கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது.

ஏழைகளின் மருத்துவ சிகிச்சைக்காக அமல்படுத்தப்பட்ட இன்சுரன்ஸ் திட்டம், அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை கட்டும் திட்டம், ஏழைகளுக்கு வீட்டு வசதி திட்டம், இலவச சமையல் கேஸ் திட்டம் போன்றவை மாநிலம், மொழி, இனம், மதம், ஜாதி பாகுபாடில்லாமல் நேரடியாக பயனாளிகளை சென்றடைந்துள்ளது.

பெண்களுக்கான திட்டங்கள் மூலம் அவர்களின் முன்னேற்றத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ராணுவத்தில் அவர்களுக்கு இருந்த தடைக்கற்களும் உடைத்தெறியப்பட்டுள்ளது.

உள்நாட்டில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலான பிரச்னைகளுக்கும் தீர்வு அளிக்கும் வகையில் பாரதம் செயல்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்க வளர்ச்சியடைந்த நாடுகளே நடவடிக்கை எடுக்க தயங்கி வரும் நிலையில், பசுமை எரிபொருள் திட்டம் மூலம் 100 ஜிகாவாட் மின் உற்பத்தியை மிக குறுகிய காலத்திலேயே அடைந்திருக்கிறோம்.

2070க்குள் கார்பன் இல்லாத எரிபொருள் உற்பத்தி என்ற இலக்கை இந்தியாவால் அதற்கு முன்பே எட்ட முடியும்.

கரோனா பெருந்தொற்றால் சர்வதேசம் பெரும் நெருக்கடியை சந்தித்தது. தடுப்பூசி மூலம் பணம் ஈட்டலாம் என்று மற்ற நாடுகள் கணக்குப்போட்டுக்கொண்டிருந்த போது, நம் நாட்டு அரசும், விஞ்ஞானிகளும் குறைந்த செலவில் தடுப்பூசியை தயாரித்து அவற்றை 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இலவசமாக வழங்கினோம். இது உலகத்தை ஒரு குடும்பமாக பார்க்கும் நமது கலாச்சாரம் ஆகும். நமது ரத்தத்தில் ஊறிய பண்பாடு.

நம் நாடு சுதந்திர தின நூற்றாண்டை கொண்டாடும் 2047 ல் உலகின் நன்மைக்காக உலகிற்கு தலைமை தாங்கும் நாடாக வளர்ச்சியடைய வேண்டும். இதற்கு படிப்படியான வளர்ச்சிக்கு திட்டமிட வேண்டும். அதற்காக இளைஞர்களுக்கு நம் நாட்டைப்பற்றிய உண்மையான கண்ணோட்டத்தை பல்கலைக்கழகங்கள் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here