உச்சநீதி மன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ராஜீவ்காந்தி கொலைவழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. இதில் பேரறிவாளன் நிர பராதி என்றோ, அவருக்கும் ராஜீவ் உள்ளிட்ட பலர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கும் தொடர் பில்லை என்றோ உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறவில்லை.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கவர்னர் முடிவெடுக்காமல் காலதாமதப்படுத்தியதால், தங்களுக்கான சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்வதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். ந õட்டில் எத்தனையோ வழக்குகள் நிலுவையில் உள்ளன. எத்தனையோ அப்பாவிகள் கூட சிறையில் உள்ளனர். ஆனால் அவர்களுக்கெல்லாம் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, அதை உச்சநீதிமன்றமே உறுதி செய்த வழக்கின் குற்றவாளியை விடுதலை செய்ய நீதிபதிகள் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தியதும், இந்த தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டது தான் என்பதை உறுதி செய்யும் வகையில் தண்டனை கைதி ஒருவருக்கு ஜாமீன் கொடுத்தும் மாண்புமிகு நீதிபதிகள் உத்தரவிட்டதை நாட்டு மக்கள் ஆச்சரியமாகத் தான் பார்க்கிறார்கள்.
தீர்ப்பு எப்படியோ இருந்துவிட்டு போகட்டும்… இனி சிறைச்சாலைகளே வேண்டாம் என்று கூட நீதிமன்றங்கள் முடிவெடுக்கட்டும்… ஆனால் 17 பேர் கொடூரமாக கொல்லப்படுவதற்கு காரணமான குற்றவாளிகளில் ஒருவர் நீதிமன்ற முடிவுப்படி தண்டனை காலம் முடிவடைந்து விடுதலை செய்யப்படுகிறார். அதனால் அவர் உத்தமராகிவிடப்போவதில்லை. அப்படிப்பட்ட கொலைக்குற்றவாளியை அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் முதல்வராக பதவியேற்றுள்ள ஒருவர் கட்டிப்பிடித்து வரவேற்பது சரியானது தானா என்ற கேள்வியை பாஜ தலைவர் அண்ணாமலை எழுப்பியுள்ளார்.
இந்த கேள்வி நியாயமான ஒன்று தான். பல கொடூர கொலையாளிகள் சிறையில் உள்ளனர். அவர்கள் சிலர் முன்கூட்டியே விடுதலையும் செய்யப்படுகின்றனர். அதை அரசின் தலைமை பீடத்தில் உள்ளவர் சென்று வரவேற்றால் மக்களின் நிலை என்ன?
இதற்கிடையே கொலையாளியின் விடுதலைக்கு தாங்கள் தான் காரணம் என்று திமுக, அதிமுக, மதிமுக, சீமான் உள்ளிட்டோரிடம் பெரும் போட்டியே நடக்கிறது.
இந்த பெருங்கூச்சலுக்கு நடுவே… ‘என் தாயை பார்சலாகத் தான் கட்டிக் கொடுத்தார்கள். இன்று உச்சநீதிமன்றம் விடுதலை செய்யலாம். ஆனால் ஆண்டவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது’ என்று ராஜீவுடன் உயிரிழந்த பெண்மணியின் மகன் ஒருவரின் குரலும், ‘கொலைகாரனை ஆண்டவன் விடமாட்டான். கொலைவெறியோடு பலரை கொன்றவனுக்கு சாவே வராமல் தடுக்க நீதிபதிகளால் முடியுமா’ என்று குண்டுவெடிப்பில் கைவிரல்களை இழந்து, இன்றும் குண்டுத்துகள்களை நெஞ்சில் தாங்கி நிற்கும் ஓய்வு பெற்ற பெண் போலீஸ் அதிகாரியின் குரல்களும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. காலம் இதற்கு பதில் சொல்லும்.