நரேந்திர மோதி அவர்கள் பலமுறை தமிழ் வடமொழியைக் காட்டிலும் பழமையானது என சொல்லி வருகிறார்கள்.
இதை சில ஹிந்துத்துவ வடமொழி ஆர்வலர்களே கடும் சொற்களால் விமர்சித்திருக்கிறார்கள். ஆனால் நரேந்திர மோதி அவர்கள் செய்வது மிக முக்கியமான ஒரு உண்மை.
தமிழின் ஆதி வடிவமான ஒரு மொழி நிச்சயமாக பண்டைய பாரதத்தில் மையமான வலு கொண்டது.
இன்று வடமொழி எனப்படுவதில் அம்மொழியின் பங்களிப்பும் இன்று தமிழ் எனப்படுவதில் இருமொழிகளின் பங்களிப்பும் உண்டு. மிக ஆழமாக உண்டு.
தமிழை மிகப்பழமையான மொழி என்றும் ஏன் வடமொழியைக் காட்டிலும் தொன்மையானதென்றே சொல்வதும், தமிழை ஞானமொழி புனித மொழி என புகழ்வதும் – ஒரு பக்கம் என்றால் வடமொழியை பாரதமெங்கும் பரவிய சடங்குமொழி தத்துவ ஞான உரையாடலுக்கான மொழி பண்பாட்டு இணைப்பு மொழி என கருதுவது மறுபக்கம் என்றால் அவை mutually exclusive விஷயங்கள் அல்ல என்பதை அவர் இதன் மூலம் உணர்த்துகிறார்.
இதை அவர்கள் தமிழர்களிடம் பேசவில்லை. தமிழர்களுக்கு ஏற்கனவே திராவிட இயக்கங்கள் உருவாக்கிய போதையான கர்வத்தை சொறிந்துவிடுவதில் அவருக்கு ஆர்வம் கிஞ்சித்தும் இல்லை.
மாறாக இதை அவர் வட இந்தியாவில் உள்ள இளைஞர்களிடமும் சிறார்களிடமும் சொல்கிறார்.
ஹரப்பா பண்பாட்டின் மொழி எதுவென இன்னும் ஏதும் முடிந்த முடிவாகிடவில்லை.
நான் அறிவாளி அல்ல. ஒரு சராசரி அல்லது சராசரிக்கும் கொஞ்சம் கீழான என் அறிவின் ஊகம் ஹரப்பா பண்பாடு பன்மொழி பண்பாடாக இருக்க வாய்ப்புகள் உண்டு.
அங்கு தொல்-தமிழெனக் கருதப்படும் மொழிகளும் தொல்-இந்தோ ஐரோப்பியம் என கருதப்படும் மொழிகளும் இருந்திருக்கலாம்.
அவற்றிலிருந்தே இன்று நாம் செவ்வடிவில் காணும் தமிழும் வடமொழியும் உருவாகியிருக்கக் கூடும். இவற்றின் உயிர்நாடி ஒன்றே -அதுவே இந்த தேசத்தின் பண்பாடு.
இதை ஒவ்வொரு வட இந்தியனும் ஒவ்வொரு தமிழனும் உணர வேண்டும். வடமொழி வெறுப்பில் நாம் தமிழின் ஒரு உன்னத பகுதியையும் சேர்த்தே வெறுக்கிறோம்.
தமிழ் மொழி உதாசீனத்தில் பாரத பண்பாட்டின் மிக உன்னதமான ஒரு மொழிப்பங்களிப்பையே நாம் உதாசீனப்படுத்துகிறோம். இந்த இரண்டையும் உணர்வது இந்துத்துவம்.