2100 ஆண்டுகளுக்கு முன்பு சங்கத்தமிழன் அதியமானின் கல்வெட்டு ஒன்று கிடைக்கிறது. அதாவது ஜம்பைக் கல்வெட்டு என்பது, தமிழ்நாட்டில் ஜம்பை என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தமிழ் பிராமிக் கல்வெட்டாகும்.
ஜம்பை என்ற ஊரானது விழுப்புரம் மாவட்டத்தில், தென் பெண்ணை ஆற்றங் கரையில், திருக்கோயிலூர் நகரத்துக்கு அண்மையில் அமைந்துள்ளது.
இக்கல்வெட்டானது இவ்வாறு கூறுகிறது,
“ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாளி”
இக்கல்வெட்டை தமிழிக்கல்வெட்டு என்றுதான் சொல்கிறோம். இங்கே 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் எழுத்துகளுடன் வடமொழி எழுத்தான “ஸ” வந்துவிட்டது என்பதற்காக சங்கத்தமிழன் அதியமானை நாம் விமர்ச்சிப்பதில்லை. மாறாக மூவேந்தர்களும் தமிழுக்கு நிகராக கருதிய வடமொழியையும் போற்றியே வந்துள்ளனர் என்பதையும் நாம் மறுக்க முடியாது.

வடமொழியையும் தமிழையும் மூவேந்தர்களில் முன்னவர்களான பாண்டியர்கள் எவ்வாறு கருதினார்கள் என்பதை தளவாய்புர செப்பேடுகள் விளக்குகிறது….!
“பஞ்சவனென்னும் பெயர்நிறீயும் வளமதுரை நகர்கண்டும் மற்றதற்கு மதில் வகுத்தும் உளமிக்க மதியதனால் ஒண் தமிழும் வடமொழியும் பழுதறத்தான் ஆராய்ந்து பண்டிதரில் மேந்தோன்றியும்
மாரதர் மலை களத்தவியப் பாரதத்திற் படகோட்டியும் விசயனை வசுசாபம் நீக்கியும் வேந்தழிச்சுரம் போக்கியும்”
- தளவாய்புரச் செப்பேடு
பொருள் : பாண்டவர்க்குரிய பஞ்சவனெனும் பெயரை பெற்றவனும்,மதுரை மாநகர் கண்டு,அதற்கு மதிலமைத்த பெருமை பெற்றவனும் ஆவான்.தமிழையும், வடமொழியையும் ஒருங்கே கற்று ஆராய்ந்து அதில் பண்டிதர்களை விட மேலே நின்றான். பாரதப் போரில் தன் யானைப்படையை செலுத்தி மகாசேனாதிபதிகளை அழித்ததோடு,அர்ஜூனனின் வசுசாபத்தை நீக்கினான் பாண்டியன் என்கிறது அச்சாசனம்…!