1921- 1925 ஆம் ஆண்டுகளில் Sir John Marshall மற்றும் Mortimer Wheelar போன்றோரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின்போது கிடைத்த சுடுமண் முத்திரைகளில் அமர்ந்த நிலையிலிருக்கும் ஒரு சித்தனின் முத்திரை கிடைத்துள்ளது. இது சிந்துசமவெளி காலத்தைச் சேர்ந்தது என்பது அவர்களின் அனுமானம்.
இது உணர்த்துவது யாதெனில் பதஞ்சலி முனிவர் மற்றும் திருமூலருக்கு முன்பே இந்த பாரதத் திருநாட்டில் யோகக் கலைகள் சிறந்து விளங்கின என்பதாம். இப்படி பதஞ்சலி முனிவருக்கு முன்பிருந்த யோகக்கலைகளைத் தொகுத்து “யோக சூத்திரம்” என்றொரு நூலைத்தந்தவர்தான் பதஞ்சலி முனிவர்.
சங்ககால தமிழ் இலக்கியங்களிலும் அதற்கு பின்பான பல தமிழ் இலக்கியங்களிலும் யோகா பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் என்றான ஏலாதி என்ற நூல் “கணிமேதாவியார்” என்ற சமண முனிவரால் எழுதப்பட்டது. இந்நூலில் “உடற்பயிற்சி” செய்வது பற்றிய குறிப்புகள் உள்ளன.
அதாவது,
“எடுத்தல் முடக்கல் நிமிர்த்தல் நிலையே
படுத்தலோடு ஆடல் பகரின் – அடுத்துயிர்
ஆறு தொழிலென் றறைந்தார் உயர்ந்தவர்
வேறு தொழிலாய் விரித்து”
- ஏலாதி.
பொருள் : உறுப்பினை யெடுத்தலும் முடக்கலும், நிமிர்த்தலும், நிற்றலும், கிடத்தலும், ஆடுதலுமெனத் தொழிலாறு வகைப்படும், பகர்வேமாயினித் தொழில்களையடுத் துயிர் தனது வருத்த முறுந் தொழிலென்றவற்றை யறிந்தார் சொன்னாரொன் றொன்றனோடு வேறுபட்ட தொழிலாக விரித்தது. என்கிறார் கணிமேதாவியார்.
இது அக்காலத்திலிருந்து யோகக்கலைகளை உணர்த்துவதாகவே உள்ளது. மேலும் நற்றிணைப் பாடல் ஒன்று “கையூண் இருக்கை நிலை” என்றொரு யோக நிலையை முனிவர்கள் செய்ததாக கூறுகிறது. இதை பிராணாயாமம் என்ற நிலையை குறிக்கிறது.
அதாவது,
“கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை முந்து விளை பெருங் குரல் கொண்ட மந்தி கல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி, அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு, தன் திரை அணற் கொடுங் கவுள் நிறைய முக்கி, வான் பெயல் நனைந்த புறத்த, நோன்பியர் “கை ஊண் இருக்கையின்” தோன்றும் நாடன் வந்தனன், வாழி – தோழி! உலகம் கயம் கண் அற்ற பைது அறு காலை, பீளொடு திரங்கிய நெல்லிற்கு நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே”
- நற்றிணை.
பொருள் : கடுவன் எனும் ஆண்குரங்கானது தினைக்கதிரை கிள்ளி வாயில் அடக்கிக்கெண்டு மழையில் நனைந்துகொண்டே இருப்பதை முனிவர்கள் ஒரு கையை மூக்கில வைத்து மூச்சுப்பயிற்சிக்காக அமர்ந்திருப்பது போன்று காணப்படும் என்கிறார். இங்கு திணையை வாயில் வைத்திருக்கும் குரங்கிற்கு முனிவர்களின் யோகநிலை உவமையாக்கப்பட்டிருப்பதைக் காண்க. யோகநிலை பற்றி திருமூலர் குறிப்பிடுகையில்,
“அந்நெறி இந்நெறி என்னாதே அட்டாங்கந்
தன்னெறி சென்று சமாதியி லேநின்மின்
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம் புன்னெறி ஆகத்திற் போக்கில்லை யாகுமே”
- திருமந்திரம்.
பொருள் : நாம் கொண்ட நெறி நன்றோ, இது வல்லாத பிறிதொரு நெறி நன்றோ` என்று ஐயுற்று அலமராது, எந்நெறிக்கும் வேண்டப்படுவதாகிய அட்டாங்கத்தை உடைய யோக நெறியிலே சென்று, உம்மால் விரும்பப்படுகின்ற பொருளிலே உள்ளம் ஒடுங்குங்கள். இவ்வாறு ஒடுங்கும் நன்னெறியில் நிற்பவர்க்கு ஞானத்தை எளிதில் தலைப்படுதல் கூடும். பின்பு அந்த ஞானத்தின் பயனாகப் பிறவியாகிய இழி நெறியிற் செல்லுதல் இல்லையாம். இப்படி நம் முன்னோர்களால் வளர்க்கப்பட்ட யோகக் கலையானது இன்று நமது இந்திய அரசால் போற்றிப் புகழப்படுவது கண்டு இன்புறுகிறேன்..!