தமிழக பாஜவும் , அண்ணாமலையின் பயணமும்

கடலில் தத்தளிப்பவன் கையில் ஏதாவது ஒரு மிதவைக் கிடைத்தால், எப்படியாவது நீந்தி கரைசேர்வான் என்பது நிதர்சனம். ஏறக்குறைய அப்படியொரு தத்தளிப்பு நிலையில் உள்ள தமிழக பாஜவுக்கு, நம்பிக்கைக்கு உரிய மிதவையாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கிடைத்துள்ளார். தமிழக பாஜவுக்கு மிகமிக இளம் வயதில் ஒருவர் தலைமைப் பொறுப்பேற்றுள்ளார் என்பதைவிட, அவருக்கான பொறுப்பு, எந்தளவுக்கு அழுத்தம் கொடுப்பதாக உள்ளது என்பதை விவரிக்கவே இந்தக் கட்டுரை.

பேச்சால் வளர்ந்த திராவிடம்

தமிழகத்தில் வாயால் வடை சுட்டு வளர்ந்த இயக்கம் என்றால் அது ராமசாமி தொடங்கிய திராவிடர் கழகமும், அதிலிருந்து உருவாக்கப்பட்ட திராவிடர் முன்னேற்றக் கழகமும்தான். ராமசாமி தன் இறுதி நாள்வரை மக்களுக்காக உழைத்தார் என்பதைவிட, தான் பேசிய ஒவ்வொரு சொல்லுக்கும் காசு பார்த்தார் என்பதே உண்மை. அதனால்தான் வாயால் வடைசுட்டு வளர்ந்த இயக்கம் திக என்று சொல்கிறோம். அதேபோல், திமுக. ரூபாய்க்கு 3 படி அரிசி என்று பஞ்ச காலத்தில் மக்களின் பசி, பஞ்ச உணர்வைத் துாண்டி அதில் குளிர்காயந்தது அண்ணாதுரை தலைமையிலான திமுக. இப்போதும் கூட, சமீபத்திய சட்டசபைத் தேர்தலில், திமுகவின் தேர்தல் அறிக்கைப் பற்றிய விவரங்களைப் படித்தால், பதவிக்கு வரவேண்டும் என்று முடிவு செய்தால், எந்தளவுக்கும் தரைமட்டத்துக்கு இறங்கியடிப்பார்கள் என்ற சொல்லாமல் புரியும்.

பண பலம்

திராவிட கட்சிகளின் பண பலத்துக்கு முன்னாள், மற்ற கட்சிகளின் பண பலம் எல்லாம் கொசுதான். எல்லா தேர்தல்களிலும் திராவிட கட்சிகள் கொட்டிக் கொடுத்த பணம் அதிகம். இதில், திமுகவின் சமீபத்திய மார்கெட்டிங் டெக்னாலனி வேற லெவல் என்பதுபோல் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், திமுக மிகச் சிறந்த முறையில், தன்னை மார்க்கெட்டிங் செய்து, லோக்சபா, சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றது. இதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக அவர்கள் செலவிட்டுள்ளனர். இதில், பிரசாந்த் கிஷோருக்கு செலவிட்டதாக கூறப்படும் 380 கோடி ரூபாயும் அடங்கும். இதை திமுக மறுப்பதாக இருந்தால், அதிமுக ஒவ்வொரு மேடையிலும் இதைப்பற்றி பேசியபோது, மறுப்புத் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், மவுனம் சம்மதம் என்பதுபோல், திமுகவின் அமைதி இருந்துவிட்டது.
அதேபோல், அதிமுகவும் பண பலத்தில் சளைத்தது அல்ல. திராவிட அரசியலில் பணம் குவிப்பதில் அதிமுக இளங்கலை பட்டம் பெற்றிருந்தால், திமுக முதுகலைப் பட்டம் பெற்ற கட்சியாகும். இந்த பணபலத்தை முறியடிக்க வேண்டுமானால், தேச பக்தியுடன் கொஞ்சம் பண பலமும் அவசியம்.

பிரச்சார பலம் வேண்டும்.

தமிழகத்தில் பாஜ பெருமை பேசிக் கொண்டிருந்தால், ஒரு காலத்திலும் வளரப்போவதில்லை. இன்னும் எத்தனை கட்சித் தலைவர்கள் வேண்டுமானாலும் மாறலாம். ஆனால், கட்சியை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு செல்லும் வகையிலான, பலமான பிரச்சார கட்டமைப்பு இல்லாவிட்டால், சென்னையில் உட்கார்ந்து கொண்டு எதுவும் செய்யமுடியாது. திமுகவின் தொடக்க காலத்தில், அதன் பலமான பிரச்சார கட்டமைப்பே, தமிழகத்தின் கடைக்கோடி வரை அந்தக் கட்சியை கொண்டு சென்றது. இதற்கு, சினிமா மாஸ் கொண்ட எம்ஜி ராமச்சந்திரனின் உதவியும் தேவைப்பட்டது எனலாம். ஆனால், எம்ஜி ராமச்சந்திரன் திமுகவில் இருந்த பிரிந்த பின்னர், திமுக தாக்குப் பிடித்தது என்றால், அதன் பலமான பிரச்சார கட்டமைப்பும் ஒரு காரணம்.

மக்கள் விரும்புவது என்ன?

திமுக பேச்சாளர்கள் எந்தளவுக்கு பேசுவார்கள் என்று வெற்றி கொண்டான், தீப்பொறி ஆறுமுகம் பேச்சைக் கேட்டவர்களுக்குத் தெரியும். மகாகேவலமாக எதிர் கட்சித் தலைவர்களை விமர்சித்து, அதில் புலகாங்கிதம் அடைவார்கள். பொய்களை கட்டவிழ்த்துவிடத் தயங்கிட மாட்டார்கள். ஒரு பொய்யை சொல்லத் தொடங்கினால், அது உண்மை என்று மக்களை நம்ப வைக்கும் வகை, திமுகவினர் ஓயமாட்டார்கள் என்பது சத்தியம். பொய்யை உண்மை என்று நம்ப வைக்கும்போது, உண்மையை உரக்கச் சொல்வதில், பாஜவுக்கு என்ன தயக்கம் இருக்கப்போகிறது?
பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து, ஒன்றும் தெரியாத திமுக பேச்சாளர்கள், ட்விட்டர் கூலிகள் எல்லாம், உண்மைக்குப் புறம்பான செய்திகளை பதிவிட்ட காலகட்டத்தில், தமிழக பாஜ அதற்கு என்ன பதிலடி கொடுத்தது. ஒரு தேசத் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் எந்தளவுக்கு கூர்ந்து நோக்கப்படுகிறது என்று விரிவாக மக்களிடம், தெருமுனைக் கூட்டத்தில் கொண்டு சேர்க்கும் பேச்சாளர்கள் பாஜவில் இல்லை.

தமிழகத்தில் 10 ரூபாய் நலத்திட்டம் கொடுத்தால், நுாறு ரூபாய்க்கு விளம்பரக் கணக்கு எழுதும் காலகட்டத்தில், பல கோடி ரூபாய் நலத்திட்டங்கள் செய்தபோதும், அதுபற்றிய அடிப்படைத் தகவல் மக்களுக்கு சென்று சேராதது, தமிழக பாஜ செய்த மாபெரும் தவறாகும். இன்னமும் உண்மையை நேசிக்கும் மக்கள் தமிழகத்தில் நிறையவே உள்ளனர். உண்மை உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், பொய்மை பல்லக்கில் வலம் வந்துவிடும். அதில் ஆட்சிக் காலமும் அடங்கும்.

அண்ணாமலை சாதிக்க என்ன வேண்டும்?

சட்டத்தில் 2 வகை உண்டு. ஒன்று வக்கீல் சட்டம். இன்னொன்று போலீஸ் சட்டம். வக்கீல் சட்டத்தில் நீதி கிடைக்க நீண்ட நாட்களாகும். வக்கீலின் சட்டம் நீதிபதிக்குப் புரியும். அவருக்கு மட்டும்தான் புரியும். ஆனால், போலீசின் சட்டம் பொதுமக்களுக்கு புரியும். ஆர்ப்பாட்டம், போராட்ட களத்துக்கு முதலில் வந்து மக்களை சமாதானம் செய்வது போலீஸ்தான். நீதித்துறையல்ல. களத்தில் போலீஸ் அத்துமீறினால் மட்டுமே நீதித்துறை தலையிடும். இந்தவகையில், மக்கள் அறிந்த, மக்களை அறிந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தமிழக பாஜ தலைவரானதில் மகிழ்ச்சியே.
காரணம், மக்களின் உளம் அறிந்து அவரால் பேச முடியும். உணர்ச்சி வசப்பட்ட பேச்சைவிட, மக்கள் மனம் கவர்ந்த வகையில் பேசுவதில் அண்ணாமலை தேர்ந்தவர். குறிப்பாக, சட்டசபைத் தேர்தல் களத்தில் அவரது அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரங்கள் இதை உணர்த்தும். அவரது நியாயமான உண்மையான பேச்சு, தமிழக உலமாக்கள் இடையே ஒரு அதிர்வை உண்டாக்கி, பிரச்சாரத்துக்கு வரும் அரசியல் கட்சியினரை தடுக்க வேண்டாம் என்று கடிதம் எழுதும் அளவுக்கு நெருக்கடி கொடுத்தது.

இப்படிப்பட்ட சூழல் உணர்ந்த பேச்சாளர், உணர்ச்சிவசப்படாத பேச்சாளர் கட்சிக்குத் தேவை. ஆனால், ராஜா மட்டுமே போரில் வெற்றிபெற முடியாது. அதற்கு பலமான சேனை வேண்டாம். இந்த வகையில், தமிழக பாஜவுக்கு பலமான, நல்ல சிந்தனை கொண்ட ராஜா கிடைத்துள்ளார். ஆனால், அவருக்கு பக்கபலமாக செயல்படும் வகையிலான பிரச்சார சேனைக்கு பாஜவின் தேசிய தலைமைகள் இதுவரை என்ன செய்துள்ளன?
தமிழகத்தை பொறுத்தவரை பாஜ மதவாத கட்சி என்பதைத்தான் திமுக மீண்டும் மீண்டும் பரப்பிவருகிறது. ஆனால், பாஜ தேசத்தின் வளர்ச்சிக்கான கட்சி என்று என்பதை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில், ஒரு மிகப் பெரிய பிரச்சார பலம் கொண்ட படை வேண்டும். ஒவ்வொரு கிராமத்தின் குடிமகனுக்கும் புரியும் வகையில் பேச வேண்டிய பேச்சுகள் பட்டியலிட வேண்டும்.

குறிப்பாக, இப்போதைய பெட்ரோல், டீசல் விலையில் இருந்து, உலக அரசியல் வரை தெரிந்தவர்களாக இருப்பதும், அப்படிப்பட்டவர்களாக தன் பிரச்சார படையை உருவாக்குவதும், பாஜவின் தேசிய தலைமையின் கையில்தான் உள்ளது. இதைச் செய்யாதவரை, பாஜ தமிழகத்தில் சவலைப்பிள்ளைதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here