காக்கப்பட வேண்டிய கோவில்கள் இடிக்கப் படலாமா..?!

1920 ஆம் ஆண்டு பனகல் அரசர் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, அப்போது மதராஸ் மாகாணத்தில் இருந்த அனைத்து திருக்கோயில்களையும், அரசின் கட்டுப்பாட்டின் கீழ், கொண்டு வர முயற்சித்தார். இதற்காக 1922 ஆம் ஆண்டு, “இந்து பரிபாலன சட்டத்தை” முன் மொழிந்தார்.

1925 ஆம் ஆண்டு, இந்து பரிபாலன சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தினார். அப்போதைய வைஸ்ராய் இர்வினிடம் எடுத்துச் சொல்லி இந்த சட்டத்துக்கான ஒப்புதலைப் பெற்றார். இறுதியில் 1927-ல் ‘இந்து சமய அறநிலைய வாரியம்’ என்ற அமைப்பு உருவாக்கப் பட்டது.

இதன்படி, திருக்கோயில்களின் நிர்வாகத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் வாரியத்திடம் வழங்கப் பட்டது. தற்போது, அரசு புள்ளி விவரங்களின் படி, தமிழகத்தில் உள்ள மொத்த கோவில்களின் எண்ணிக்கை – 44,333
மாவட்டங்கள் வாரியாக உள்ள கோவில்களின் எண்ணிக்கை:
திருச்சி – 2891
தஞ்சாவூர் – 2333
திருவாரூர் – 1945
மதுரை – 1808
திண்டுக்கல் – 1661
கடலூர் – 1650
நெல்லை – 1604
தூத்துக்குடி – 1468
கோவை – 1457
அரியலூர் – 1447
ஈரோடு – 1420
சேலம் – 1418
கிருஷ்ணகிரி-1391
திருப்பூர் – 1338
திருவண்ணாமலை – 1332
புதுக்கோட்டை – 1317
மயிலாடுதுறை – 1245
சென்னை – 1212
தர்மபுரி – 1208
கன்னியாகுமரி – 1167
சிவகங்கை – 1135
நாமக்கல் – 1058
விழுப்புரம் – 1056
கள்ளக்குறிச்சி – 1052
திருவள்ளூர் – 1005
நாகப்பட்டினம் – 963
தென்காசி – 962
பெரம்பலூர் – 950
கரூர் – 770
செங்கல்பட்டு – 721
காஞ்சிபுரம் – 697
விருதுநகர் – 561
வேலூர் – 477
ராணிப்பேட்டை – 470
ராமநாதபுரம் – 465
தேனி – 335
திருப்பத்தூர்- 295

கோவில்களின் இன்றைய நிலை:

“ஆயிரம் கோவில்களின் நகரம்” என பெருமையுடன் அழைக்கப் பட்ட காஞ்சிபுரத்தில், அரசு புள்ளி விவரங்களின் படி, இன்று இருப்பதோ, வெறும் 697 கோவில்கள் மட்டுமே. இது போல, பல ஆயிரக்கணக்கான கோவில்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும், எங்கே போயின..! யாரால் ஆக்கிரமிக்கப் பட்டு உள்ளது? என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது..?!
கோவில் கோபுரத்தை காக்க, தங்களுடைய தலையையே கொடுக்க முன் வந்த, மருது சகோதரர்கள் போன்றோர் வாழ்ந்த தமிழகத்தில், தற்போது கோவில்களின் நிலை, மிகவும் பரிதாபமாகவே உள்ளது.
பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு, தப்பிப் பிழைத்த சில கோவில்கள், தற்போது, அரசாங்கத்தால் இடிக்கப் படுவது, மிகவும் வேதனையாக உள்ளது, என பக்தர்கள் தங்களது கவலையை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர்.

மத வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டம், 1991:

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நரசிம்மராவ் அவர்கள், பிரதமராக இருந்த காலக்கட்டத்தில், 1991 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் “மத வழிபாட்டு தலம் பாதுகாப்பு சட்டம்” என்ற சட்டம் இயற்றப் பட்டது. அந்த சட்டத்தின் படி, “சுதந்திரம் அடைந்த, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி நிலவரப்படி, எந்தெந்த வழிபாட்டுத் தலங்கள், எங்கெங்கு இருந்தனவோ, அவைகள் அதே நிலையில் இருக்கலாம், வழிபாடுகள் தொடரலாம் என்றும், எந்தக் காரணத்தைக் கொண்டும், யாரும், அரசும், வழிபாட்டுத் தலங்களை இடிக்கக் கூடாது என, பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப் பட்டது.

இடிக்கப் படும் கோவில்கள்:

சட்டத்தை முற்றிலும் புறக்கணிக்கும் விதமாக, சென்னையில் பேசின் பாலம் ரயில் நிலையம் அருகில் அமைந்து உள்ள, 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த “பூ மாரியம்மன் கோவில்”, மதுரை மாவட்டத்தில் இலந்நியேந்தல் பகுதியில் அமைந்து உள்ள, 200 வருடங்கள் பழமையான “காவல் தெய்வமாட வாழ வந்தாள்” கோவில்கள் இடிப்பதற்கு முயற்சி செய்யப் படுகின்றன என்ற தகவல்கள் உலா வருகின்றது.
தற்போதோ, ஜூலை 13, 2021 அன்று, கோயம்புத்தூரில் முத்தண்ணன் கோவிலின் குளக்கரை, மதுரை வீரன் பட்டத்தரசி அம்மன் கோவில், பண்ணாரி அம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், கருப்பராயன் கோவில், முனீஸ்வரன் கோவில் உள்ளிட்ட பல கோவில்கள், கோவை மாநகராட்சியால் இடிக்கப் பட்டது.
அவற்றில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலும், மாரியம்மன் கோவிலும் நூறு ஆண்டுகள் மேல் பழமை வாய்ந்தவை. கோவில்களை இடிப்பதற்கு பக்தர்களும், ஆன்மீக துறவிகளும், மடாதிபதிகளும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். எனினும், புராதன கோவில்கள், புல்டோசர் வண்டிகளால் இடிக்கப் பட்டன.

மீண்டும் நிலை நிறுத்தப்பட்ட அண்ணா வளைவு:

செப்டம்பர் மாதம் 2012 ஆம் ஆண்டு, பூந்தமல்லி நெடுஞ்சாலை முதல் அண்ணாநகர் அவின்யூ இடையே மேம்பாலம் அமைப்பதற்காக, சென்னையில் அண்ணாநகரில் அமைந்து உள்ள அண்ணா வளைவை (Anna Arch), சில நாட்கள் எடுத்ததற்கு, அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி, தனது கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார். அதற்கு பதிலளித்த அன்றைய முதல்வர் ஜெயலலிதா, மீண்டும் அதே இடத்தில், அந்த அண்ணா வளைவு நிறுவப்படும் என உறுதி அளித்தார். கூறியது போலவே, வேலை முடிந்த பிறகு, அதே இடத்தில், அண்ணா வளைவு நிறுவப்பட்டது.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சல்:

நமது நாட்டை ஆட்சி செய்த மன்னர்கள், கோவிலுக்கு என்று தனியாக நிலங்களை ஒதுக்கி, அதன் மூலம் வரும் வருமானத்தை கொண்டு, கோவிலை நிர்வகிக்கும் வகையில், திட்டம் தீட்டி, அதை செயல்படுத்தியும் வந்தனர். தங்களின் காலத்திற்குப் பின்னரும், கோவில்கள் நன்கு பராமரிக்கப் பட வேண்டும் என்பதற்காகவே, கோவிலுக்கு என பல நிலங்களை, தானமாக வாரி வழங்கினர்.
ஆனால் அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டு, அதற்கு உண்டான வாடகையும் யாரும் சரிவர கொடுப்பது இல்லை. தற்போதோ, இறைவன் இருக்கும் இடத்தையும் ஆக்கிரமிக்கும் எண்ணத்தோடு, இறைவன் வாழும் கோவிலையும் இடிப்பது “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது” என பக்தர்கள் கூறி வருகின்றனர்.

இந்து முன்னணி:

சென்னை விருகம்பாக்கத்தில் அமைந்து உள்ள “சுந்தர வரதராஜ பெருமாள் கோவில்”, சுமார் 800 வருடம் பழமை வாய்ந்தது. 1997 ஆம் ஆண்டு, அன்றைய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆருண் மற்றும் இதர முஸ்லிம்கள், 15 ஏக்கர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து, மசூதி கட்ட நினைத்தனர். இந்து முன்னணியைச் சேர்ந்த துரை சங்கர் அவர்களின் முயற்சியால், 400 கோடி மதிப்பு உள்ள, அந்த கோவில் நிலங்கள் மீட்கப் பட்டது.

ஆக்கிரமிக்கப் பட்ட கோவில் நிலங்கள்:

“ஸ்ரீரங்கம்” ஸ்ரீ ரங்கநாதருக்கு, புதுக்கோட்டை மாவட்டத்தில், 1200 ஏக்கர் நிலங்கள் காணிக்கையாக வழங்கப் பட்டது. அந்த இடங்கள் சிறுகச்சிறுக விற்கப்பட்டு, தற்போது பலராலும் ஆக்கிரமிக்கப் பட்டு உள்ளது. அந்த இடத்தின் மூலமாக, கோவில்களுக்கு என, எந்த வருமானமும் வருவது இல்லை.
திருச்சியில் பேருந்து நிலையம் அருகே “சத்திரம்” என்ற இடம் உள்ளது. அந்த இடம் திருவிழா காலங்களில், பொது மக்கள், உணவு சாப்பிடுவதற்காக, தானமாக வழங்கப்பட்ட இடம். தற்போது, அந்த இடம் தனியாருக்கு விற்கப்பட்டு, வாடகை ஏதும் கிடைக்கப் பெறுவது இல்லை. கோயம்புத்தூரில் மட்டும், 3 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட கோவில் நிலங்கள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக கூறப் படுகின்றது.

மதுரையில், 2019 ஆம் ஆண்டு, “மீனாட்சி அம்மன்” கோவிலுக்கு சொந்தமான 14 ஏக்கர் நிலங்கள் தனியாரால் நிர்வகிக்கப் படுகின்றது. அந்த இடத்தை, மீட்க சென்ற அதிகாரிகள் மிரட்டப்பட்டு, தாக்குதலுக்கும் உள்ளாக்கப் பட்டனர்.
தஞ்சாவூரில் தொப்புள் பிள்ளையார் தெருவில் அமைந்து உள்ள “சிவன் கோவில்”, தற்போது வீடாக மாறி உள்ளது. அது போல், அங்கு உள்ள விநாயகர் கோவிலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது.
அறந்தாங்கியில் “அருள்மிகு வீரமாகாளியம்மன்” கோவிலுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 400 சதுர அடி நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வந்தது. பின்னர் அது மீட்கப்பட்டது. 2018 – 2019 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் மட்டும், 127.42 கோடி மதிப்பு உள்ள கோவில் நிலங்கள், மீட்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வருகின்றது. பக்தர்கள், இந்து கோவில்களுக்கு மட்டும் தானமாக வழங்கிய நிலங்களின் அளவு, சுமார் 1.934 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. அதுவே, 4.87 லட்சம் ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. அவைகளை மொத்தமாக கணக்கிட்டால், பெருநகர சென்னையை விட, அந்த இடம் மிக அதிகமான பரப்பளவு கொண்டது.

பக்தர்களின் கோரிக்கை நிறைவேறுமா?:

இன்னும் கணக்கில் வராமல், பல கோடி மதிப்பு உள்ள கோவில் நிலத்தை அந்நியர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். அவைகளை மீட்டு, பல நல்ல திட்டங்களை, தமிழக அரசு செயல் படுத்தலாம்.
பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டப்படி, பழமை வாய்ந்த கோவில்களை இடிக்கக் கூடாது. எனினும், பழமையான கோவில்கள் இடிக்கப் படுகிறது. அதற்கு, இந்து ஆன்மீக அமைப்புகள், தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இனி வரும் காலங்களில், மற்ற கோவில்கள் பாதுகாப்புடன் இருக்குமா?! என்ற ஐயமும் பக்தர்கள் மனதில் ஏற்படுகின்றது.
அண்ணா வளைவுக்காக, ஒரு சேர குரல் கொடுத்த திராவிட கட்சிகள், கோவில்களைக் காப்பதற்கான நடவடிக்கையை எடுக்குமா? என்பதே பக்தர்களின் எண்ணமாக உள்ளது.
“புராதன கோவில்கள் காக்கப்பட வேண்டும்” என்ற பக்தர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றுமா!? என்பதை காலம் பதில் சொல்லும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here