தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் தினமும் 1500 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு வருகின்றனர். மொத்த பரிசோதனையில், 0.5 சதவிதம் மட்டுமே தினசரி தொற்று விகிதம் இருந்தது. டாஸ்மாக் மதுக்கடைகள், மால்கள், பஸ்கள், பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் என்று பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களையும் திறந்துவிட்ட தமிழக அரசு கோயில்களை மட்டும் கொரோனாவை காரணம் காட்டி வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் மூடவும், ஆடிப்பெருக்கு, அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களிலும் கோயில்களுக்கு மட்டும் தி.மு.க அரசு பூட்டுப்போட்டது. அதே சமயத்தில் மற்ற வழிபாட்டு தலங்கள் எந்த கட்டுப்பாடும் இன்றி திறக்கப்பட்டன. அதிர்ச்சியடைந்த இந்து இயக்கங்கள் தி.மு.க அரசை கண்டித்து போராட்டங்களை நடத்தின. பல இடங்களில் தடையை மீறி பக்தர்கள் வழிபாடு நடத்தினர். நாகர்கோயில் நாகராஜா கோயிலில் பக்தர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று வழிபட்டு திரும்பினர். தி.மு.க. அரசின் இந்து விரோத செயலை கண்டித்து பாஜக ஆயிரக்கணக்கானவர்களை திரட்டி போராட்டம் நடத்தியதோடு, 10 தினங்களில் கோயில்களை திறக்காவிட்டால், தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்கும் அளவிற்கு போராட்டம் நடத்துவோம் என்று அண்ணாமலை அறிவித்தார். இதனிடையே கொரோனா ஊரடங்கு தளர்வு குறித்து ஆலோசனை கூட்டம் நடத்திய ஸ்டாலின், கோயில்களை வாரம் முழுவதும் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார். வெற்றித் திருநாளான நாளை விஜயதசமியன்று இந்துக்கள் தடையின்றி கோயில்களுக்கு சென்று தங்கள் வெற்றிக்கு நன்றி தெரிவித்து இறைவனை வழிபடலாம். இந்துக்கள் ஒன்றிணைந்து நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.