*இராஜராஜன் பிறந்தநாள் கட்டுரை
மாமன்னன் இராஜராஜச் சோழனுக்கு நாளை பிறந்தநாள். “தமிழ் கூறும் நல்லுலகின்” பெருமையை உலகின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் கொண்டுசென்ற பெருமை இராஜராச் சோழனையேச் சாரும்.
தமிழர்களின் பெருமையை உலகறியச்செய்தான் என்பதாலேயோ என்னவோ தமிழர் போர்வையில் இருக்கும் சிலர் இம்மாமன்னன் மீது அவ்வப்போது வன்மங்களை வாரி இறைப்பது வழக்கமாகும். ஆனால் தமிழர் அல்லாதோரால் இம்மண்ணிற்கும் இம்மன்னன் கட்டிய தமிழ்நாட்டின் அடையாளமாகத் திகழும் தஞ்சை பெரிய கோவிலுக்கும் நடந்த தீங்குகளைப் பற்றி யாரும் எழுதுவதும் இல்லை அவ்வளவு ஏன் பேசுவது கூட இல்லை….!
உலகக் கலை வரலாற்றில் தமிழர்களின் நிரந்தர அடையாளமாக உள்ளது இப்பெருங்கோவில். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய செய்திகளை கல்வெட்டுகளாகக் கொண்ட ஆவணக்காப்பகமாய் உள்ள ஒரு கோவில். நவீனப் பொறியாளர்களைத் திணறடிக்கும் தமிழர்களின் கட்டுமானஅறிவியலுக்குச் சான்று கூறும் பெரியகோவில்.
ஆயிரம் ஆண்டுகள் கடந்து. எத்தனையோ இயற்கைப் பேரழிவுகளை எதிர்கொண்டு, அந்நியர் படையெடுப்புகளின் குரூரத்தைத் தாங்கி இன்றும் நிலைத்து நிற்கும் ஓர் அதிசயக்கோவில்தான் இராஜராஜச் சோழரால் எடுக்கப்பட்ட “இராஜராஜேஷ்வரம்” என்னும் தஞ்சை பெருவுடையார் கோவில்…!
பெரியகோவில் எதிர்கொண்ட எத்தனையோ சீரழிவுகளில் இன்றும் நமது கண்களில் கண்ணீரை வரவழைக்கும் ஒரு நிகழ்வு உண்டு. அந்நிகழ்வானது நம்மால் எண்ணிப்பார்க்கவே இயலாத கொடூர நிகழ்வாகும். அன்றைய காலத்தில் தமிழகத்தில் தமிழர்களின் ஆட்சி நீங்கி அந்நியர்களின் ஆதிக்கம் மேலோங்கிய காலம் அது. அதாவது கி.பி.1758. தஞ்சையை ஆண்டது பிரதாபசிம்மன் என்னும் மராட்டியர்.
இக்காலத்தில் பிரெஞ்சுபடை தஞ்சையை முற்றுகையிட்டது. பிரஞ்சு தளபதி லாலி என்பவன் தலைமையில் தஞ்சைக் கோட்டையின் மீது மூன்று நாட்கள் பீரங்கித் தாக்குதல் நடந்தது.
கோட்டைக்குள்தான் தஞ்சைப் பெரியகோவிலும் இருந்தது. இத்தாக்குதலில் பெரியகோவிலின் வடபகுதி பெருத்த சேதமடைந்தது.அதோடு கி.பி.1771 இல் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் தாக்குதலில் பெரியகோவிலின் மேற்கு மற்றும் தெற்குப்பகுதிகள் அழிந்தன. இவ்விரண்டுத் தாக்குதல்களின் முழுமையான விபரங்களை Robert orme என்பவர் எழுதிய ” A history of the military transactions of the British nation in indostan ” என்னும் நூலில் வரைபடங்களுடன் பதிவு செய்துள்ளார்….!

கி.பி.1773 முதல் 1776 வரை மூன்று வருடங்கள். ஆர்காடு நவாப் மற்றும் ஆங்கிலேயர்களின் படைவீடாக. வீரர்களின் பயிற்சி முகாமாக பெரியகோவில் இருந்தது.கோவில் வளாகத்தில் பீரங்கிகள் நிலைநிறுத்தப்பட்டன. வீரர்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி முகாமும் கோவிலினுள் செயல்பட்டது.
வீரர்களின் அணிவகுப்பு, பீரங்கிமுழக்கம், சீறிப்பாய்ந்தத் தோட்டாக்கள் கோவிலின் சுவற்றில் பட்டுத் தெறித்தன. சேதாரம் என்னவோ தோட்டாவுக்குத்தான்.பொட்டுவைத்தது போல் ஒரு சிறு குழியாகக் கோவில் சுவற்றில் தோட்டாக்களின் தடம் தான் இன்றும் இருக்கிறது…!
பெருவுடையார் இருக்கும் கருவறையும் அந்நிய வீரர்களின் தங்குமிடம் ஆனது. கருவறை வாசலில் ARP பாதுகாப்பிடம் என்னும் எழுத்துப்பொறிப்பாக இரானுவக்குறியீடை இன்றும் காணலாம். காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் இதோஇன்று நம் கண்முன்னே பெருவுடையாரின் பெருங்கோவில்உருக்குலையாமல் உள்ளபடியே உள்ளது.
அர்த்த மண்டபத்தின் இரு தளங்களில் மேல்தளம் அழிந்தது.திருச்சுற்றின் இருதளங்களில் மீதம் இருப்பது கீழ்தளம் மட்டுமே. இருந்தும்.216 அடி உயர ஸ்ரீவிமானம் அப்படியே. இராஜராஜர் எடுத்த அதே வடிவத்தில் இன்றும் உயர்ந்து நின்று உலகக் கட்டிடக்கலை வரலாற்றில் தமிழனின் சாதனையை பறைசாற்றுகிறது தஞ்சைப் பெரியகோவில்.விட்டுப்போன எச்சங்களின் மிச்சமாய் ஒரு பீரங்கி ஒன்று இன்றும் பெரியகோவில் வளாகத்தில் உள்ளது.

216 அடி உயர விமானத்தின் காலடியில் ஒரு சிறு இரும்புத்துண்டாக உள்ளது அந்த பீரங்கி அந்த பீரங்கியின் குண்டுகளோ வாயில் கோபுரத்தின் பூட்டிய அறைக்குள் சிறைபட்டுள்ளது. இதுபோல ஆவணப்படுத்தப்படாதஇன்னும் இன்னும் எத்தனை எத்தனை இடர்களை இக்கோவில் எதிர்கொண்டதோ..?
இத்தனை பேராடர்களைத் தாங்கி பேரரசர் எடுத்த இப்பெருங்கோவில்.சூரிய சந்திரர் இருக்கும் வரை இக்கோவிலும் இருக்கும் என்ற இராஜராஜரின் விருப்பம் நிறைவேறியது. இப்பெருங்கோவில் எடுத்த பேரரசரின் பிறந்த நாள் பெருவிழாவும் இதே பெருங்கோவிலில் 13.11.2021 வருகிறது. அச்சுப நிகழ்வை கொண்டாடுவதோடு மாமன்னன் இராஜராஜனின் புகழை உலகுக்கு பறைசாற்றுவோம்…!