திருவள்ளுவர் சிலையின் பெருமையை சிதைக்க தி.க.வின் சதிக்கு உடந்தையாக தி.மு.க. அரசு!!

தி.க. சார்பில் திருச்சி மாவட்டத்தில் சென்னை நெடுஞ்சாலையில் சிறுகனூரில் ஈ.வே.ராமசாமிக்கு 100 கோடி ரூபாய் செலவில் 135 அடி உயர சிலை வைக்க தி.மு.க அரசு அனுமதி அளித்துள்ளது. ஈ.வே.ராவிற்கு தமிழகம் முழுவதும் சிலையிருந்தாலும் அதை பொதுமக்கள் யாரும் கண்டுகொள்வதில்லை. அதனால் ஈ.வே.ராவிற்கு 135 அடி உயரத்தில் சிலை அமைத்தாலும் சாமானிய மக்கள் யாரும் பொருட்படுத்தப்போவதில்லை. ஆனால், தெய்வப்புலவர் திருவள்ளுவரின் உண்மை தோற்றத்துடன் வெளியிட்டதை, திருவள்ளுவருக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டது என்று கத்தி கூப்பாடு போட்ட தி.மு.க, தற்போது தமிழகத்தின் உயரமான சிலை என்ற கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் பெருமையை தட்டிப்பறிக்கும் தி.கவின் செயலுக்கு துணைபோயிருப்பது தான் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

குமரி முனையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைத்த ஏக்நாத் ரானடே, 1972 ல் அதன் திறப்புவிழாவில் கலந்து கொண்ட அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியிடம், அருகில் இருந்த பாறையில் திருவள்ளுவருக்கு பிரமாண்ட சிலை அமைத்து பெருமைப்படுத்தும் திட்டத்தை அளித்தார். அதற்கான முழுத்திட்டம், வரைப்படம் மற்றும் மதிப்பீட்டையும் அளித்தார். 1975 ல் திருவள்ளுவர் சிலை அமைப்புத் திட்டம் அமைக்கப்பட்டு 1979 ல் அடிக்கல் நாட்டப்பட்டாலும், 1990 ல் மீண்டும் முதல்வராக இருந்த கருணாநிதியால் சிலை அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது. மாமல்லபுர அரசு கட்டட மற்றும் சிற்ப கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் கணபதி தலைமையில் சிலை செதுக்கும் பணி தொடங்கியது. ஆனால் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கட்டுமானப்பணி கிடப்பில் போடப்பட்டது. 1997 இல் மீண்டும் புத்துயிர் பெற்று பணி விரைவு படுத்தப்பட்டது. மொத்தம் 6.14 கோடி செலவில், திருக்குறளின் 133 அதிகாரத்தை குறிக்கும் வகையில் 133 அடி உயரத்தில் தமிழகத்தில் உயரமான சிலையாக பெருமையுடன் நிற்கிறது திருவள்ளுவர் சிலை. இந்த சிலையை அமைத்த பெருமை முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கே சேரும் என்று தி.மு.க.வினர் இப்போதும் கூறி வருகின்றனர்.

ஆனால் திருவள்ளுவரையும், திருக்குறளையும் கடுமையாகவும், ஆபாசமாகவும் விமர்சித்த ஈ.வே.ராவிற்கும், 135 என்ற எண்ணிற்கும் எந்த தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை. மாறாக திருவள்ளுவரின் சிலையை விட உயரமாக இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக வீரமணி தலைமையிலான தி.க.வினர் இந்த சதித்திட்டத்தை தீட்டியுள்ளனர். அதை புரிந்து கொண்டோ, அல்லது புரிந்து கொள்ளாமலோ 135 அடி உயர சிலை வைக்க அனுமதித்தன் மூலம், திருவள்ளுவர் சிலையின் பெருமையை தட்டிப்பறிக்கும் தி.க.வின் திட்டத்திற்கு ஸ்டாலின் துணை போயுள்ளார். அத்தோடு, தி.மு.கவினர் திருவள்ளுவர் மீது காட்டுவது போலி பற்று என்பது தி.மு.க அரசின் இந்த நடவடிக்கை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here