பள்ளியா-சீர்திருத்தப்பள்ளியா முடிவெடுக்க வேண்டிய நேரம்!

தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசுப்பள்ளி மாணவர்களுக்காக அப்பள்ளியில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்காத பெற்றோர்கள் உட்பட பொதுமக்களின் வரிப்பணம் 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்படுகிறது.

இது அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையால் வகுத்தால் சாராசரியாக ஒரு மாணவனுக்கு அரசு செலவிடும் தொகை ஆண்டிற்கு 60,000 ரூபாய்க்கும் அதிகம். அதாவது பல தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் செலுத்தும் கட்டணத்தைவிட இது அதிகம்.

ஆனால் இந்த மாணவர்களின் கல்வித்தரம் எப்படி இருக்கிறது? மருத்துவக்கல்லூரி முதற்கொண்டு அனைத்து உயர்கல்விகளிலும் 7.5 சதவீத இடஒதுக்கீடு கொடுக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் அரசு பள்ளி மாணவர்களின் நிலை உள்ளது.

பள்ளி சீருடை, மதிய உணவு, பஸ் கட்டணம், பாடப்புத்தகங்கள், இலவச சைக்கிள், இலவச லேப்டாப் என்று எல்லாமே இலவசமாக இந்த மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால் அவர்களோ விலை உயர்ந்த செல்போன்களுடன் பள்ளிக்கு வருகின்றனர். பல மாணவர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துகின்றனர்.

படிப்பு மீது சிறிதும் அக்கறையில்லாமல் செயல்படும் சில மாணவர்களால் மற்ற மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதன் உச்சகட்டமாக பள்ளி ஆசிரியை ஒருவரை ஒரு மாணவன் கத்தியால் குத்தியுள்ளான், மற்றொரு மாணவன் ஆசிரியரை மிரட்டுகிறான்.

இதன் தொடர்ச்சியாக ஆசிரியரை ரேக்கிங் செய்வது, ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது சினிமா பாட்டை ஒலிக்கவிட்டு குத்து ஆட்டம் போடுவது, டெஸ்க், பெஞ்சுகளை அடித்து உடைப்பது என்று தறிகெட்டு போய்க்கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ், இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் குணங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்களை கையாளுவதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம் என்கிறார்.

இதேபோல தான் தனியார் பள்ளி மாணவர்களின் நிலையும் இருக்கும். ஆனால் அவர்கள் ஏன் ரவுடித்தனத்தில் இறங்குவதில்லை. அதற்கு முக்கிய காரணம், தனது கல்வியின் மதிப்பு அவர்களுக்கு தெரிகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கோ அனைத்தும் இலவசமாக கிடைப்பதால் மதிப்பு தெரிவதில்லை.

தவறு செய்யும் மாணவர்களை பத்து தினங்களுக்கு பள்ளியிலிருந்து ‘சஸ்பெண்ட்’ செய்து கடும் நடவடிக்கை(?) எடுக்கிறார் மாவட்ட ஆட்சியர்! ஏற்கனவே பள்ளிக்கு கட் அடித்து ஊர் சுற்றும் மாணவர்களுக்கு இது தண்டனையா அல்லது பரிசா?

எனவே அரசு பள்ளி மாணவர்களின் நிலையை மாற்றி, அவர்களையும் தனியார் பள்ளி மாணவர்களுடன் சரிசமமாக போட்டியிடும் நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றால் இதில் கடும் நடவடிக்கை எடுத்தல் அவசியம்.

வரம்பு மீறி செல்லும் மாணவர்களுக்கு பாடம் படிக்க பள்ளி சரியான இடம் இல்லை. அவர்கள் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட வேண்டியவர்கள். இந்த பிரச்சனையை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் இது வியாதியாக பரவி, அனைத்து அரசு பள்ளி மாணவர்களின் வாழ்க்கையையும் நாசமாக்கும்.

18 வயதிற்கு குறைவானவர்கள் வாகனங்களை இயக்கி விபத்து ஏற்படுத்தினால் அவர்களது பெற்றோர்களுக்கு தண்டனை அளிப்பது போல, பள்ளி மாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு பெற்றோர்களையும் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்.

பொருளிழப்பு ஏற்படுத்தும் மாணவர்களுக்கு அனைத்து அரசு சலுகைகளும் நிறுத்தப்பட்டு, இழப்பை அவர்களிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு துணிந்து செய்ய வேண்டிய நேரம் இது… செய்யுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here