தமிழக அரசால் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் மளிகை பொருட்களில் தரமில்லை என்ற குற்றச்சாட்டு காட்டுத்தீ போல தமிழக மக்களிடையே பரவிக் கொண்டிருந்தது. பொருட்களின் எண்ணிக்கை குறைவு, உருகிய வெல்லம், சிரிஜ்ஞ் வெல்லம், துணி வெல்லம், செல் ரவை, பல்லி புளி என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தகவல்கள் பரவிக் கொண்டிருந்தன.
கடந்த ஆண்டு ரூ.2,500 ரொக்கம் பொங்கல்பரிசாக எடப்பாடி பழனிச்சாமி அளித்தபோது, அதை 5,000 மாக கொடுக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் கோரிக்கைவிடுத்திருந்தார். இப்போது ஒத்த பைசா கூட கொடுக்கவில்லை என்பதை சாமானிய மக்களும் சமூக வலைதளங்களில் கொட்டித் தீர்த்தனர்.
இந்த இரண்டு தினங்களாக அந்த அதிருப்தி பின்னுக்குத் தள்ளப்பட்டு, குடியரசு தினவிழாவில் தமிழகத்தின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது. இது தமிழகத்தை புறக்கணிக்கும் செயல் என்று தி.மு.கவினரும், தமிழகத்தின் ஊடகத்தினரும் ஒப்பாரி வைக்கத் துவங்கிவிட்டனர். முதல்வர் ஸ்டாலினும் உடனே பிரதமருக்கு இந்த ‘கொடுமையை’ எதிர்த்து கடிதம் எழுதியுள்ளார்.
மாலைமலர் போன்ற பத்திரிக்கைகள், இந்த அலங்கார ஊர்தியை தேர்வு செய்யும் குழுவில் இருந்த அதிகாரி, சுதந்திரப்போராட்ட வீரர் வ.உ.சியை கப்பல் வியாபாரி என்று குறிப்பிட்டு நிராகரித்ததாக தங்கள் பங்கிற்கு வெறுப்பை உமிழ்ந்தன.
உண்மை என்ன?
டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில் அனைத்து மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் இடம்பெறாது. தேர்வு செய்யப்பட்ட ஊர்திகள் மட்டுமே இடம்பெறும். இதில் மத்தியில் ஆளும் கட்சி ஆளும் மாநிலம், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலம் என்றெல்லாம் பார்ப்பதில்லை. இதற்கென பாதுகாப்பு துறையில் உள்ள தேர்வுக்குழு அதிகாரிகள், நிர்ணயிக்கப்பட்ட அளவுகளில், விதிமுறைகளின் கீழ் இருப்பவற்றில் சிறந்தவற்றை தேர்வு செய்வார்கள்.
தி.மு.க மத்திய அரசில் அங்கம் வகித்தபோது வெறும் 3 முறை மட்டுமே தமிழகத்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் பாஜ மத்தியில் ஆட்சி அமைந்த பின்னர் நடந்த 7 குடியரசு தினவிழாவில் 6 விழாவில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இம்முறை தமிழக அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்படவில்லை. அதிலும் 3 சுற்றுவரை முன்னேறிய தமிழக ஊர்தி, கடைசி சுற்றில் வாய்ப்பு இழந்துள்ளது. இது முழுக்க முழுக்க, தகுதி அடிப்படையில் தேர்வு நடக்கிறது.
இந்த விவகாரத்தை அரசியலாக்கியிருப்பது தி.மு.கவிற்கே தேசிய அளவில் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளி ஒருவர் போலீஸ் காவலில் இறந்த விவகாரத்தை விவாதித்து மாநில அரசுக்கு சங்கடம் தர விரும்பாமலும், பொங்கல் பரிசு அதிருப்தியை ஈடுகட்டவும் தமிழகத்தில் உள்ள முக்கிய ஊடகங்களும் குடியரசு தினவிழா ஊர்தி விவாகரத்தை விவாதப்பொருளாக்கி ஊதி பெருக்கி வருகின்றனர்.
திமுக இதுபோன்ற அரசியலில் இருந்து வெளியே வரவேண்டும். கட்சியின் ஐடி விங்க்கும் ஆக்கப்பூர்வமான அரசியலுக்கு வந்து, தி.மு.க அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க முயலவேண்டும்.
அ.தி.மு.க மீதும், மத்திய பா.ஜ.க அரசு மீதும் குற்றம் சுமத்தியே 5 ஆண்டுகளை ஓட்டிவிட முடியாது.