கொக்கென இல்லை… மீனென காத்திருக்கிறார் கவர்னர்!

திமுக தனது தாய் கட்சி என்று எந்த தி.க மற்றும் நீதிக் கட்சிகளை குறிப்பிட்டு வருகிறார்களோ, அந்த இரண்டு கட்சியுமே இந்திய சுதந்திரத்தின் மீதோ அல்லது இந்தியக் குடியரசின் மீதோ நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல.

மாறாக இந்தியச் சுதந்திரத்திற்கு எதிராக ஆங்கில அரசால் கொண்டுவரப்பட்ட அத்தனை அடிமை சட்டங்களையும் வரவேற்றவர்கள்; அச்சட்டங்களுக்குச் சலாம் போட்டவர்கள்.

ஆங்கிலேயருக்கு அருவருடிகளாக இருந்தால் மட்டுமே தங்களை வலுப்படுத்திக் கொள்ள முடியும்; வளப்படுத்திக் கொள்ள முடியும் என்று கருதியவர்கள் மட்டுமல்ல. அப்படி வளப்படுத்திக் கொண்ட மிட்டாமிராஸ் வகுப்பை சார்ந்தவர்களே அவர்கள்.

இந்தியாவெங்கும் சுதந்திரப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஆங்கிலேயர்கள் அமைத்துக் கொடுத்த மன்றங்களில் பங்கேற்று தங்களுடைய சுகபோக வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள்.

அந்த நீதிக்கட்சி மற்றும் திராவிடர் கழகத்தின் பிள்ளையாக உருவெடுத்த திமுகவும் அதன் துவக்கம் முதலே பிரிவினை எண்ணங்களை மட்டுமே மக்கள் மத்தியில் விதைத்து, தேசிய நீரோட்டத்திற்கு எதிராக பிரிவினை-பேத இயக்கத்தைக் கட்டியமைத்தார்கள். 1950-களில் தோன்றிய சினிமா மோகங்கள் இவர்கள் தங்களுடைய இயக்கத்தை விரிவுப்படுத்திக் கொள்வதற்குப் பெரிதும் பயன்பட்டது.

”ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமே” என்று இந்தியத் தேசம் முழுவதும் ஒருமித்த குரலில் குதூகலம் அடைந்த பொழுது திராவிட நாடு கேட்டு குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டியவர்கள் தான் இவர்கள்.

முற்போக்கு, ஆரிய எதிர்ப்பு, கடவுள் மறுப்பு என அனைத்துமே மோசடியும் பித்தலாட்டமும் உள்ளடக்கியவையே.

1962-ல் இந்தோ-சீனா யுத்தத்தின் போது பிரிவினை பற்றிப் பேசினால் கட்சி தடை செய்யப்படும் என்ற உடனேயே ‘திராவிட நாடு; கோரிக்கையைக் கைவிட்டு விட்டு நிதி திரட்ட சென்ற வீராதி வீரர்கள் இவர்கள்.

1976-களில் அன்னை இந்திராகாந்தி கொண்டுவந்த அவசரநிலை பிரகடனத்தின் போது ’இருபது அம்சத் திட்டம் மட்டுமல்ல, இருபத்தி ஒன்றாவது அம்ச திட்டமான விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டத்தையும் கொண்டு வருகிறோம்’ என்று வாய்சவடால் பேசியதால், ஆட்சிக் கலைப்பிற்கு ஆளாகி, ஏறக்குறைய ஒன்றரை வருடம் வாலை சுருட்டிக்கொண்டு, தமிழக சிறைகளில் முடங்கிக் கிடந்தவர்கள்.

1989-91 களில் விடுதலைப்புலிகளுக்கு என்று எதுவுமே செய்யாமல் வீரா வசனம் பேசி, ஆட்சி கலைப்பிற்கு ஆளானவர்கள்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் காலூன்றிய பொழுது அவர்கள் தங்களுடைய வர்த்தகத்தை விரிவுபடுத்தும் பொருட்டு கல்கத்தா, சென்னை, மும்பை ஆகிய மூன்று துறைமுக பகுதிகளையும் வலுப்படுத்தினார்.

சென்னைப் பட்டினம் விரிவானதும் சென்னை உயர்நீதிமன்ற கட்டிடம், சென்னை மற்றும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிகள், சென்னை ரயில் நிலையங்கள், வேளான் பல்கலைக்கழகம், பெரும்பெரும் பாலங்கள், சாலைகள், துறைமுகங்கள், தமிழ் நாடெங்கும் இணைப்புச் சாலைகள் போன்றவை உருவாக்கப்பட்டது ஆங்கிலேயர் காலத்தில் தான்.

அதன் பின், காங்கிரசு ஆட்சிக் காலத்தில் பெரும்பெரும் அணைக்கட்டுகளும்; பள்ளி, கல்லூரிகளும்; பொதுப்பணித்துறை கட்டிடங்களும் உருவாகின. எனவே, ஏறக்குறைய 300 ஆண்டுக் காலத்திற்கு மேலாகத் தமிழகத்தில் பலராலும் உருவாக்கப்பட்ட வலுவான அடி கட்டமைப்பின் மீது அமர்ந்துகொண்டு, திமுக ’திராவிட ஜம்பம்’ பேசி வருகிறது. இவர்களுக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் எவ்வித தொடர்புமே இல்லை!

இந்திய தேசம் விடுதலை பெறுவதற்கோ, இந்தியாவில் வாழுகின்ற கோடான கோடி மக்களுக்கான இந்திய அரசியல் சாசனம் உருவாகுவதற்கோ இந்த திராவிட காக்கைகள் ஒரு சொட்டு வியர்வையோ, ரத்தமோ சிந்தியவர்கள் அல்ல.

வெறும் மேடைகளில் வீராவசனம் பேசி காங்கிரசின் பலகீனத்தால் ஆட்சி-அதிகாரத்தைப் பிடித்துக் கொண்டவர்கள். அடிப்படையில் அதிகார மனப்போக்கும், தாங்கள் என்ற அகங்கார எண்ணமும் கொண்டவர்களே இவர்கள். ஜனநாயக மாண்பு என்ன? என்பது எள்ளளவும் இவர்களிடத்தில் என்றுமே இருந்ததில்லை.

இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை மாண்பின் அடிச்சுவடு கூட தெரியாமல் ஆளுநர் பதவி அவ்வப்போது இவர்களுக்கு எளிதான இலக்காகி விடுகிறது.

ஆளுநரின் அதிகாரம் என்ன? என்பது இவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தும், இரண்டு-மூன்று முறை நன்கு பட்ட பின்பும் கூட, இவர்களுக்கு புத்தி வந்தபாடில்லை. சட்ட வல்லுநர்களும் இவர்களுக்கு சரியாக வழி காட்டுவதாகத் தெரியவில்லை. பலமுறை சொன்னாலும் ஆட்சி போதையிலே இருப்பவர்களுக்கு அது ஏறுமா? என்பது சந்தேகமே!

அமைச்சர்களாக வரக்கூடியவர்கள் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சங்களில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தேர்தலில் போட்டியிடத் தகுதியானவர்கள் என்று வருகிறதோ, அன்று தான் இந்த அரைகுறை அராஜக வாதிகள் ஆட்சிக்கட்டிலில் அமரக் கூடிய நிலைகள் ஒழித்துக் கட்டப்படும் என்றே கருதுகிறேன்.

தமிழகத்தினுடைய மேதகு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தமிழகத்தில் பொறுப்பேற்று நான்கைந்து மாதங்கள் கூட பூர்த்தி ஆகவில்லை. அதற்குள்ளாக அவருடன் மோதல் போக்கை இவர்கள் கையாளுகிறார்கள்.

தமிழகம் திமுகக்காரனுடைய அப்பன்-பாட்டன் வீட்டுச் சொத்து கிடையாது. தமிழ்நாட்டில் வாழுகின்ற அனைவருக்கும் தமிழக ஆட்சி-அதிகாரத்தில் பங்கு உண்டு. வாக்களித்தவர்களுக்கும் பங்கு உண்டு, வாக்களிக்காதவர்களுக்கும் பங்கு உண்டு; பதவியில் உள்ளவர்களுக்கும் பங்கு உண்டு, பதவியில் இல்லாதவர்களுக்கும் பங்கு உண்டு.

The Government ‘Of the people, by the people and for the people”

தமிழகத்திலுள்ள அனைத்து வாக்காளர்களும் ஆட்சிக்கட்டிலில் அமர முடியாது என்பதாலேயே 20-25 பேரை அமர வைத்திருக்கிறோம். அதற்காக தாங்கள் தான் எல்லாம் என்ற எண்ணம் வருமேயானால், அவர்களின் கும்பிகள் கருகிப் போய்விடும்.

இவர்களுடைய பதவி ஆசைக்காக, கோடி கோடியாய் கொள்ளை அடிக்க வேண்டும் என்பதற்காக தேர்தலுக்கு முன்பாக இவர்கள் வண்டி வண்டியாக வாக்குறுதிகளை அள்ளி விடுவார்கள்.
வாக்குறுதியைக் கொடுக்கின்ற பொழுது ”வெற்றிபெற்று, சட்டமன்றத்திற்குச் சென்ற பிறகு, தீர்மானம் நிறைவேற்றுவோம்; அந்த தீர்மானத்திற்கு ஆட்சி அதிகாரத்தின் உச்சத்தில் அமர்ந்திருக்கும் ஆளுநர் உடனடியாக கையெழுத்துப் போட்டு விடுவார்; அதை உடனடியாக இவர்கள் சொன்ன உடனேயே தபால்காரரைப் போல இந்தியாவின் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பார்; ஜனாதிபதி உடனடியாக முத்துவேல் கருணாநிதி மகன் உத்தரவு போட்டுவிட்டார், உடனடியாக முத்திரை போட்டு அனுப்பிவிடுங்கள் என்று உத்தரவு போட்டு விடுவார் என்று மக்களிடையே ஊர் ஊராக எடுத்துச் சொன்னார்களா? இப்படிச் சொல்லித்தான் வாக்கு வாங்கினார்களா? என்ன பைத்தியக்காரத் தனம்? என்ன ஆணவம் இது?

திமுககாரர்கள் இந்திய மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் என்ன நல்ல பண்புகளை எடுத்துச் சொல்ல விரும்புகிறார்கள்? இன்றைய தமிழக ஆளுநர் ரவி மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கக்கூடிய எந்த ஆளுநரும் எவருடைய எடுபிடியாகவும் இருக்க மாட்டார்கள்; இருந்த வரலாறும் கிடையாது.

இந்தியாவினுடைய அரசியல் சாசனத்தை ’திராவிட அறிவுஜீவீகள்’ கொஞ்சமாவது படித்துப் பார்க்க வேண்டும். இந்தியாவின் ஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் இந்திய மாநிலங்களின் ஆளுநருக்கு இருக்கிறது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் ஒரு அவசர நிலை பிரகடனத்தை அறிவிப்பது என்றாலும் கூட மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்தால் மட்டுமே ஜனாதிபதியால் அவசர நிலை பிரகடனத்தை அமலாக்க முடியும்.

ஆனால், ஒரு மாநில அரசைக் கலைப்பதற்கு அந்த மாநில அரசின் ஒப்புதல் ஆளுநருக்கு தேவையில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெடுகிறது; தமிழக சட்டப்பேரவை இந்திய அரசியல் சாசனத்தின் பிரதான கோட்பாடுகளிலிருந்து விலகிப் பிரிவினை எண்ணத்தை விதைத்து வருகிறது போன்ற வலுவான சில ஆதாரங்களை முன் வைத்தாலே இந்த ஆட்சி கலைக்கப்பட்டு விடலாம்.

திமுக தனது மிதமிஞ்சிய ஆணவத்தால் தங்களை அதற்கு ஆயத்தப்படுத்திக் கொள்வதாகவே தெரிகிறது. மத்திய அரசு அதற்குண்டான எந்த முனைப்பையும் காட்டாவிட்டாலும் கூட, இல்லை இல்லை எங்களால் 5 ஆண்டுகாலம் முழுமையாக ஆள முடியாது. எங்கள் முன் யார் இருக்கிறார்களோ? அவர்களுடன் முட்டி மோதி எங்கள் மண்டையை நாங்களாகவே உடைத்து கொள்வோம் என்று அவர்கள் தீர்க்கமாக இருப்பதாகவே தெரிகிறது.

தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றக் கூடிய அனைத்து தீர்மானங்களையும் ஆளுநர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்த சட்டத்திலும் வரையறை செய்யப்படவில்லை. தமிழகத்தில் இதுவரை எத்தனையோ சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. அந்த சட்டங்கள் எல்லாம் குப்பைத் தொட்டிகளில் கூட இருக்கிறதா? என்றால் கூட பதில் சொல்ல முடியாது.

இந்திய அரசியல் சாசனத்தின் அங்கம் தான் மாநில அரசு. இந்த மாநிலத்தை பரிபாலனம் செய்யக்கூடியவர் ஆளுநர் அவர்களே. இந்த மாநிலத்தை ஆளுவதற்கு உண்டான ஆலோசனை குழுவாக வேண்டுமென்றால் அமைச்சர்கள் இருப்பார்கள். எல்லாம் நியாயப்படியும், சட்டப்படியும், ஓரளவு தார்மீக அடிப்படையிலும் நடக்கின்ற வரையிலும் எந்த ஆளுநரும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைச்சரவையின் செயல்பாட்டில் அதிகம் தலையிட மாட்டார்.

ஆளுநரின் அறிவுரையைக் கேட்டு தான் அமைச்சரவை செயல்பட வேண்டுமே தவிர, அமைச்சரவை ஆளுநருக்கு உத்தரவிட முடியாது. ஆனால், ஆளுநர்கள் அமைச்சர்களுக்குக் கட்டளையிட முடியும். இவையே இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சங்கள்.

திரு.பன்வாரிலால் அவர்களை ஏமாற்றி முதல் ஆளுநர் உரையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக ’இந்தியா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் பிரிவினை எண்ணத்தோடு பாரத தேசத்தை ’ஒன்றிய அரசு’ என்று வேண்டிய அளவிற்குச் சிறுமைப்படுத்தி சட்டமன்றத்திலே பதிவு செய்யப்பட்டது. இந்தியத் தேசத்தின் வெற்றியைக் குறிக்கக்கூடிய ’ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தை நீக்கப்பட்டது.

ஆனால், விழிப்போடு இருந்த இன்றைய மேதகு ஆளுநர் ரவி அவர்கள் ஆளுநர் உரையில் எங்கும் ’ஒன்றிய அரசு’ என்று பிரிவினைவாத வார்த்தை வராமல் பார்த்துக்கொண்டார்.

எப்படியாவது இந்த ஆட்சி காலகட்டத்திலேயே தமிழ் மொழியின், தமிழ் இனத்தின், தமிழ் மண்ணின் பெருமைகளை முற்றாக அழித்து, அதற்கு ’திராவிட சாயம்’ பூசி விட வேண்டும் என்ற திராவிட ஸ்டாக்கிஸ்டுகளின் எண்ணம் நிறைவேறாமல் போனதால் ஆத்திரம் கொண்டு, இப்பொழுது ஆளுநர் மீது பாய்கிறார்கள்; பிறாண்டுகிறார்கள். ’முரசொலி’ பத்திரிக்கையில் தேவையில்லாமல் ஆளுநர் அவர்கள் மீது வைத்திருக்கக்கூடிய விமர்சனம் ஜனநாயக அத்துமீறல்; அராஜகம்; திமுகவின் அடாவடியாகும்.

அகில இந்திய அளவில் குடிமைப் பணி என்று அழைக்கக்கூடிய ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்; பிரசித்தி பெற்ற ஐ.ஐ.டி, ஐ,ஐ,எம்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு அகில இந்திய அளவிலான தேர்வுகள் மூலம் தேர்ச்சிகள் நடைபெறுகின்றன. அதையொட்டியே இந்தியத் தேசிய மருத்துவ கழகமும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே ஒரு தேர்வு மூலம் தேர்வு செய்யும் ’நீட் தேர்வு’ கொண்டுவரப்பட்டது.

பின்தங்கிய மாநிலங்கள் என்று சொல்லக்கூடிய மாநிலங்கள் கூட நீட் தேர்வு முறையை ஏற்றுக் கொண்டு மாநில பாடத்திட்டங்களை மாற்றி மாணவர்களை ஆயத்தப்படுத்தி வருகிறார்கள். இந்தியாவெங்கும் எந்த பிரச்சினைகளும் இல்லை.

ஆனால், தமிழகத்தில் மட்டும் இந்த திராவிட ஸ்டாக்கிஸ்டுகளும், அதனுடைய கொத்தடிமை கட்சிகளும் ‘தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்’ என்பதைப்போல நீட்டுக்கு எதிரான அரசியல் பிரசாரங்களை முன்னெடுப்பதோடு, தமிழக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி வைத்துக்கொண்டு இப்போது ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்.

2019 மற்றும் 2021 தேர்தலுக்கு முன்பாக ஊர் ஊராகப் பொய் வாக்குறுதி கொடுத்து, வாக்குகளைப் பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தார்கள். திமுகவின் பித்தலாட்டத்திற்கு எந்த ஆளுநர் தான் உடன் பட முடியும்; இரையாக முடியும். இவர்களை விட சட்டம் பயின்றவர்களும்; நியாயத்தை உணர்ந்தவர்களுமே அந்த பதவியில் அமர்ந்திருக்கிறார்கள்.

ஒரு அரசியல் கட்சி தேர்தல் நேரத்தில் ஆயிரம் வாக்குறுதிகளைக் கொடுப்பார்கள். எல்லாவற்றையும் ஆளுநர் நிறைவேற்றி தருவாரா? ஏற்கனவே, மத்திய அரசினுடைய சட்டம் ஒன்று நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு அமலில் இருக்கின்ற பொழுது, மாநில சட்டமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றினால் அந்த சட்டத்திற்கு ஒரு சல்லிக்காசு கூட மதிப்பில்லை என்பது தெரிந்திருந்தும், மீண்டும் மீண்டும் ஆளுநர் மீது பழியைப் போடவும்; ஆளுநர் மீது பாய்ந்து பிறாண்ட வேண்டியதற்குமான அவசியம் என்ன வந்தது? இப்படி இவர்கள் சொல்லியதைக் கேட்கவில்லை என்றால் உள்துறை அமைச்சரிடத்திலே புகார் செய்வார்கள்.

ஆளுநரை ராஜினாமா செய்யச் சொல்லுவார்கள்; ஆளுநரை நீக்க வேண்டும் என்று சொல்வார்கள். இவர்களுக்கு இசைந்து போகவில்லை என்றால் அவர்களின் ஊதுகுழல் முரசொலியில் வசை பாடுகிறார்கள்.

ஆளுநர் அண்மையில் அவருடைய ஒரு உரையில் இரு கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். அது அவரது உரிமை. அவரது அதிகார வரம்பிற்கு உட்பட்டது. நீட் தேர்வின் பயனை ஏற்கனவே தமிழக மாணவர்கள். மாணவர்கள் நுகர ஆரம்பித்துவிட்டார்கள். இருந்த ஒரு சில குறைபாடுகளும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பங்கீட்டின் மூலம் சரி செய்யப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடுவதில் என்ன தவறு?

இந்த முன்னேற்றங்களைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல், தங்களால் செய்ய முடியவில்லையே, வேறு ஒருவர் செய்துவிட்டு பெயர் வாங்குகிறார்களே என்ற அந்த காழ் புணர்வே, இப்பொழுது ஒட்டுமொத்த நீட்டையும் காலி செய்ய வேண்டும் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.

அதேபோல மும்மொழித் திட்டம். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தனது தாய் மொழி மற்றும் ஆங்கிலம் தவிர கூடுதலாக ஒரு மொழியை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்ற பொழுது, இரு மொழித் திட்டம் என்ற பெயரில் கோடான கோடி தமிழ் மாணவர்களுடைய உரிமைகளை இரு மொழிக் கொள்கை என்ற கயிற்றில் திமுக என்ற கல்நெஞ்சகாரர்கள் இறுக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

2020 புதிய கல்விக் கொள்கையின் படி, இந்த மொழியைத் தான் படிக்க வேண்டும் என்று எந்த இடத்திலும் கட்டாயமில்லை. கூடுதலாக ஒரு மொழியை மட்டுமே படியுங்கள் என்று இருக்கிறது. அது இந்தியாக இருக்கலாம்; அது ஜெர்மனியாகவும் இருக்கலாம்; வேற ஏதாவது ஒரு மொழியாக கூட இருக்கலாம்.

இவர்களுக்கு ஏன் இதில் ஆத்திரம்? மாணவர்கள் அவர்களுடைய வாழ்க்கையை பிரகாசமாக அமைத்துக் கொள்வதற்காகக் கூடுதலாக ஒரு மொழியை கற்றுக் கொள்வதில் இவர்கள் ஏன் தடையாக இருக்க வேண்டும். இந்த விஷயங்களை தான் ஆளுநர் ரவி அவர்கள் மும்மொழித் திட்டத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து தன்னுடைய கருத்தைத் தெரிவித்திருக்கிறார். ஸ்டாலினுக்கு இருக்கக்கூடிய உரிமை ஆளுநர் அவர்களுக்கு கிடையாதா? ஆளுநர் என்ன வானத்திலிருந்தா குதித்து விட்டார் என்று கேட்கக்கூடியவர்களே, ஸ்டாலின் மட்டும் எந்த வானத்திலிருந்து குதித்து விட்டார்?

ஆளுநர் அரசியல் சாசனத்தின் மிகப்பெரிய அங்கம். மாநில அரசின் சட்ட மன்றத்திற்கும் அவரே தலைவர்; நீதிமன்றத்திற்கும் அவரே தலைவர். இந்திய அரசியல் சாசனத்தின் வழிகாட்டுதலின்படி ஒரு மாநில அரசு நடைபெறுகிறதா என்று கண்காணிப்பது அவருடைய தலையாய கடமை. அந்த வகையில் ஆட்சிக் கட்டிலில் 5 ஆண்டு காலம் அமருவதற்குக் கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டுமேயானால் சட்டத்தின்படி ஆட்சி செய்தால் மட்டுமே இந்த ஆட்சி நீடிக்கும். ஏதோ உதவாக்கரை பழமொழியைச் சொல்லிச் சொல்லி தமிழக மக்களை ஏமாற்ற வேண்டாம்.
”கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவ” இல்லை இல்லை, திமுககாரர்களே! அவர் உங்களை ’கொக்கு’ என்று நினைத்திருக்க மாட்டார். மீன் என்றே நினைத்து இருப்பார். ‘ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு’ என்பதற்கு இணங்க மீன் வசமாக வாயில் மாட்டிக் கொள்ளும் வரை தேடியிருக்கும் கொக்கு ஆளுநர்.

உங்களுடைய தலைகளுக்கு மேலே ‘356’ என்ற கொக்கி இருக்கிறது என்பதை மட்டும் மறந்து விட வேண்டாம். ஆளுநர் இந்திய அரசியல் சாசனத்தின் அதிகாரப்பூர்வ அதிபர். அவர்தான் 8 கோடி தமிழ் மக்களினுடைய பாதுகாவலர்.

1976 ஆம் ஆண்டு இதே நாளில் நிகழ்ந்ததை எண்ணிச் செயல்படுங்கள்.! இல்லையேல், உங்கள் நாட்கள் எண்ணப்பட்டு விடும்!!

அனாவசியமாக ஆளுநரை விமர்சனம் செய்வதை விட்டு விடுங்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here