சாதித்த பா.ஜ.க! சரிந்த அ.தி.மு.க!!

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான தி.மு.க. மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. பணபலம், அதிகார பலம், மீடியா பலம் என்று சகல பலத்துடன் இருந்தாலும், தி.மு.க.விற்கு தனித்து தேர்தல் களத்தில் நிற்க துணிவில்லை.

சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு பா.ஜ.கவுடனான கூட்டணி வைத்ததால் சிறுபான்மையினரின் ஓட்டை இழந்தது தான் காரணம் என்று அ.தி.மு.க நம்பியது. அதனால் கூட்டணி பேச்சு வார்த்தையில் விளையாடியது. பா.ஜ.க தனித்து போட்டியிடுவோம் என்று கூறி கூட்டணியிலிருந்து வெளியேறியது. த.மா.க உள்ளிட்ட சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அ.தி.மு.க போட்டியிட்டது.

பா.ஜ.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க ஆகிய கட்சிகள் தனித்து களம் இறங்கின. தன்னுடனான கூட்டணியால் தான் சட்டசபைத் தேர்தலில் தோல்வி என்ற அ.தி.மு.கவின் எண்ணத்தை சிதறடிக்கும் வகையில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பல வேட்பாளர்கள் பா.ஜ.க சார்பில் களம் இறங்கினர்.

ஆளுங்கட்சியான தி.மு.க. 9 மாத சாதனையை சொல்லி வாக்கு கேட்பதாக கூறினாலும், மாதம் ஆயிரம் ரூபாய் குடும்பத்தலைவிகளுக்கு அளிப்போம் என்ற வாக்குறுதி, நகைக்கடன் ரத்து போன்ற தேர்தல் வாக்குறுதிகளை அம்போவென விட்டது, போதாக்குறைக்கு பொங்கல் பரிசு பொருளில் விளையாடியது போன்றவை பயம் காட்டியதால், ஹாட்பாக்ஸ், கொலுசு, இட்லி குக்கர், ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை ரொக்கம் என்று விதவிதமான வித்தைகளை தேர்தலில் காட்டியது. இதை மாநில தேர்தல் ஆணையமும், அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கண்டும் காணாமல் கடந்தனர்.

தி.மு.க.விற்கு சவால்விடும் வகையில், அ.தி.மு.க.வும் பரிசு பொருட்களையும், பணத்தையும் வாரி இறைத்தது. நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இந்த கட்சிகளுடன் போட்டிபோட முடியாமல் திணறினர்.

ஆனால் இரு கட்சிகளுக்கும் சவால் விடுக்கும் வகையில், பா.ஜ.க தொண்டர்கள் களம் இறங்கி பணியாற்றினர். அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் சுற்றி பிரச்சாரம் செய்தார். போகும் இடங்களில் எல்லாம் கூட்டம் அலைமோதியது. தி.மு.க. ஆட்சியின் தோல்வியை தோலுரித்துக்காட்டினார்.

இதற்கான பலன் தேர்தல் முடிவுகளில் தெரிந்தது. சென்னை முதல் நாகர்கோயில் வரையில் பல மாநகராட்சிகளில் பா.ஜ.கவினர் முத்திரைப்பதித்தனர். தமிழகத்தில் தாமரை மலராது என்று அரசியல்வாதிகளுக்கு மாநிலம் முழுவதும் ஆங்காங்கு தாமரையை மலரச் செய்து காட்டியுள்ளனர் அக்கட்சியின் தொண்டர்கள்.

பல இடங்களில் பா.ஜ.க இரண்டாம் இடம் பிடித்துள்ளது. பெரும்பாலான இடங்களில் அக்கட்சி 3 ம் இடம் பிடித்து, தன்னை தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக இந்த தேர்தலில் நிலை நிறுத்தியுள்ளது. 20 க்கும் மேற்பட்ட மாநகராட்சி உறுப்பினர்கள் உட்பட 300 க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளை அக்கட்சி இந்த தேர்தலில் பெற்றுள்ளது. பல பேரூராட்சிகள் பா.ஜ.க வசம் வந்துள்ளன. சில இடங்களில் பா.ஜ.கவை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க., அ.தி.மு.க வேட்பாளர்கள் டெபாசிட்டை பறி கொடுத்துள்ளனர். இந்த தேர்தலில் ஒட்டு மொத்த தமிழகத்தில் பா.ஜ.க குறைந்தது 10 சதவீத ஓட்டுக்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ஜ.கவை சுமையென்று கருதி கழற்றிவிட்ட அ.தி.மு.க நிலை தான் பரிதாபமாக உள்ளது. அக்கட்சி தோல்வியடைந்த நூற்றுக்கணக்கான இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணிக்கட்சிகளின் ஓட்டிற்கும் உள்ள வித்யாசத்தைவிட பா.ஜ.க வேட்பாளர்கள் அதிக இடம் பிடித்துள்ளனர். கோவை மாநகராட்சியில் மட்டும் 4 வார்டுகளில் அ.தி.மு.கவை பின்னுக்கு தள்ளி பா.ஜ.க இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 10 க்கும் மேற்பட்ட வார்டுகளில் பா.ஜ.க. ஓட்டுக்களை பிரித்ததால் அ.தி.மு.க தோல்வியடைந்து ஒற்றை இலக்க கவுன்சிலர்களுடன் இருக்கிறது.

எனவே இந்த தேர்தலில் தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், நம்பிக்கையையும் பா.ஜ.க அளித்துள்ளது. அ.தி.மு.க ஏமாற்றத்தை அளித்துள்ளது. பெரும் வெற்றி பெற்றுள்ள தி.மு.க. நிர்வாகிகள் இனி களத்தில் இறங்கி தங்கள் வேலையை காண்பிப்பார்கள். அதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் 2024 பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க முத்திரை பதிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here