‘நான் கோழை இல்லை. நான் இந்த கட்சியை தூக்கி நிறுத்துவேன். இந்த கட்சி சாயவில்லை, மீண்டும் இமயம் போல கம்பீரமாக கொண்டு வருவேன். இது எனக்காக தீக்குளித்த ஐவர் மீதும் ஆணை…!’ மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உணர்ச்சி பூர்வமான உரையின் ஒரு பகுதி இது.
வைகோ உணர்ச்சிகரமாக பேசுவதில் வல்லவர் என்பதை தமிழகம் அறியும். சில தினங்களுக்கு முன்பு, ‘நான் அரசியலில் ஈடுபட்டு என் வாழ்க்கையை தொலைத்துவிட்டேன்…’ என்று கதறினார். அரசியலில் ஈடுபட்டதால் அவரது குடும்பம் தற்போது நடுத்தெருவில் நிற்கிறது. மனிதன் தினசரி செலவுகளுக்கே திண்டாடுகிறார். அரசியல், அரசியல் என்று அலைந்ததால் இவரது மகன், மகளுக்கு நல்ல கல்வி கொடுக்க முடியவில்லை. அதனால் அவர்கள் கூலி வேலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர் என்பது போல இருக்கிறது வைகோவின் ஸ்டேட்மென்ட்.
திராவிட கட்சிகள் தலைவர்களின் சுயநலனையே கொள்கையாக கொண்டவை. நரம்பு புடைக்க, மீசைத் துடிக்க தொண்டர்களை தூண்டிவிட்டு வளரும் கட்சிகள். தலைவர்களை நம்பி தொண்டர்கள் தங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல. உயிரையும் தொலைத்துள்ளனர்.
ஐவர் மீது ஆணை என்று தனது கட்சியை தூக்கி நிறுத்தப்போவதாக வைகோ சபதமிட்டாரே.. யார் அந்த ஐவர்? எதற்காக அவர்கள் தீக்குளித்தனர் என்று 1993 ம் ஆண்டு நடந்த சம்பவத்தை இப்போது நினைத்தால் அவர்கள் செய்தது எவ்வளவு முட்டாள் தனம் என்று புரியவரும்.
தி.மு.க.வில் தனக்கு பின்னர் தனது மகன் ஸ்டாலின் தான் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று கருணாநிதி திட்டமிட்டு காய் நகர்த்திக் கொண்டிருந்த காலம். அப்போது அதற்கு ஒரே தடையாகவும், போட்டியாகவும் இருந்தவர் வைகோ.
வைகோவை போட்டியிலிருந்து நீக்க சமயம் பார்த்து காத்திருந்த கருணாநிதி, விடுதலைப்புலிகள் துணையோடு உங்களைக் கொல்ல வைகோ திட்டமிட்டுள்ளார் என்று உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் 3.10.1993 ல் வைகோவை திமுகவிலிருந்து நீக்கினார்.
வைகோ மீது மாறாத பற்று வைத்திருந்த அப்பாவி தி.மு.க தொண்டர்கள் ஜஹாங்கீர், உதயன், தண்டபாணி, பாலன், வீரப்பன் என்ற 5 பேர் இதைக் கண்டித்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். 9 மாவட்ட செயலாளர்கள், 400 பொதுக்குழு உறுப்பினர்கள் வைகோ பக்கம் நின்றனர்.
இறந்த தொண்டர்களுக்கு வழக்கம் போல கண்ணீர் அஞ்சலி செலுத்திய வைகோ, அடுத்த ஆண்டு ம.தி.மு.கவை துவக்கினார். பா.ஜ.க கூட்டணியில் இணைந்து இரு முறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். இரண்டாவது முறை பா.ஜ.க கூட்டணியில் தி.மு.கவும் இடம்பெற்றிருந்தது. அப்போது கருணாநிதியும், வைகோவும் கண்கள் பணித்தது, இதயம் இணைந்தது கதையாக ஒன்று சேர்ந்தனர். அதற்கு பின்னர் கூட திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய வைகோ, கருணாநிதியையும், ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்தார். ஒரு கட்டத்தில் ‘ஜாதி’ ரீதியாகவும் விமர்சிக்கும் அளவிற்கு சென்றார். ஆனால் அவரது சந்தர்பவாத அரசியலைக்கண்டு, நம்பிக்கையிழந்த முக்கிய தலைவர்கள் பலரும் மீண்டும் தி.மு.க.விற்கு செல்லத் தொடங்கிவிட்டனர். ஒரு காலத்தில் தி.மு.கவை அழித்துவிடுமோ என்று பார்க்கப்பட்ட ம.தி.மு.க பிற சிறு கட்சிகளின் வரிசையில் இணையும் நிலைக்கு சென்றது.
ஆனால், கருணாநிதி இறந்ததும், ஸ்டாலின் தி.மு.க தலைவரானதும், திடீர் கரிசனத்தோடு ஸ்டாலினை நெருங்கினார் வைகோ. அவரது சட்டையில் விழுந்த அழுக்கை கூட துடைக்கும் அளவிற்கு மாற்றம் ஏற்பட்டது. ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் என்று மேடை தோறும் முழங்கினார். அப்போது அவருக்காக தீக்குளித்த அப்பாவி தொண்டர்களைப் பற்றி மறந்தே போனார். அதற்கு அடுத்து நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க இடம்பெற்றது.
வைகோ ஸ்டாலினுக்கு தீவிர விசுவாசியாக மாறிவிட்டாலும், ஸ்டாலின் அவரை நம்பத் தயாராக இல்லை. ஆம், கூட்டணியில் ம.தி.மு.க.விற்கு இடம் உண்டு.. ஆனால் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும். அதையும் வைகோ ஏற்றுக் கொண்டார். இப்போது ம.தி.மு.க சார்பில் போட்டியிட்டவர்கள் தி.மு.க. எம்.பிக்களாகவும், எம்எல்ஏக்களாகவும் உள்ளனர்.
கருணாநிதியின் வாரிசு ஸ்டாலின் தி.மு.கவை கைப்பற்றிவிடக்கூடாது என்று போர்கொடி தூக்கியதால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட வைகோ, அதே ஸ்டாலினை தி.மு.க தலைவராக ஏற்றுக் கொண்டது ம.தி.மு.க தொண்டர்களை வெளியில் சொல்ல முடியாத விரக்தியில் ஆழ்த்தியது. ம.தி.மு.கவை தி.மு.கவுடன் இணைத்துவிட வேண்டியது தானே என்று எண்ணும் அளவிற்கு வைகோவின் நடவடிக்கை அமைந்துள்ளது.
இப்போது ம.தி.மு.க.வில் அடுத்தக்கட்ட நகர்வு துவங்கியுள்ளது. வாரிசு அரசியலுக்காக தனிக்கட்சி துவக்கி, 5 அப்பாவி தொண்டர்கள் உயிர்பலி கொடுத்து வளர்ந்த வைகோ, வயது காரணமாகவும், உடல்நிலை காரணமாகவும் கட்சியை தனது வாரிசு துரை வையாபுரி கையில் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தி.மு.க., அ.தி.மு.க ஆட்சிகளில் வைகோவுடன் நடைபயணம் சென்றும், போராட்டத்தில் ஈடுபட்டும் பல நூறு தொண்டர்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்த நிலையில், எந்த வாரிசு அரசியலுக்கு எதிராக பல உயிரை பலி கொடுத்தாரோ, அதே வாரிசு அரசியலை தனது கட்சியில் புகுத்தும் முனைப்பில் ஈடுபட்டுள்ளார். எனக்கு அவர் அரசியலுக்கு வருவதில் விருப்பமில்லை, ஆனால் மாவட்ட செயலாளர்கள் என்ன விரும்புகிறார்களோ என்று பொடி வைத்து வைகோ பேசுகிறார். கட்சியின் நகர்வு என்ன என்பதை ஒவ்வொரு மாவட்டத்திலும் துரை வைகோ கட்சி பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுவதிலிருந்தே அறிய முடிகிறது. ஆம் துரைவைகோ ம.தி.மு.கவில் சிறு பொறுப்பில் நியமிக்கப்பட்டு பின்னர் கட்சியின் பொதுச்செயலாளர் ஆவார். ம.தி.மு.கவின் சொத்துக்கள் காப்பாற்றப்படும்.
ஆனால், வைகோவிற்காக தீக்குளித்த அந்த 5 தொண்டர்களின் ஆன்மா அவரை மன்னிக்குமா என்பதை வைகோவின் மனசாட்சியிடம் தான் கேட்க வேண்டும். திராவிட கட்சிகளின் தமிழ், தமிழ்நாடு கோஷங்கள் தங்களை குடும்பங்களை வளர்க்கத் தான் என்பதை அவற்றின் தொண்டர்கள் உணர வேண்டும்.