விநாயகர் சிலை வழிபாட்டை தடுக்க வீதி தோறும் ஜபம்? பாதிரியார் பெயரில் பகீர் கடிதம்

தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க ஆட்சி அமைத்ததும், அரசின் முக்கிய பதவிகளில் கிருஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்பட்டனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் உறுப்பினராக ஏற்காட்டைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் நியமிக்கப்பட்டார். பாதிரியார் ஒருவர் தி.மு.கவின் வெற்றி கிருஸ்தவர்கள் போட்ட பிச்சை என்று பகிரங்கமாக பேசினார்.

இதைத்தொடர்ந்து தி.மு.க அரசு தொடர்ந்து இந்து விரோத போக்குடன் செயல்படத்தொடங்கியுள்ளது. காலகாலமாக கோயில்களில் பணியாற்றிய அர்ச்சகர்களை ஒரேநாளில் வெளியேற்றி,ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர்களை நியமனம் செய்தது, பிற மதத்தவர்களின் வழிபாடுகளுக்கு அனுமதியளித்துவிட்டு, இந்துக்களின் ஆடி பதினெட்டு, ஆடி அமாவாசை வழிபாடுகளுக்கு தடைவிதிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அமைச்சர்கள், தி.மு.க எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பல நூறுபேர் கூட அனுமதியளிக்கும் அரசு, விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே ஆட்சியே தங்களுடையது தான் என்று எண்ணுகின்ற வகையில் கோவை தடாகம் ரோட்டில் செயல்பட்டு வரும் செயின்ட் பால் கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பாதிரியார் டேவிட் பெயரில் அச்சிடப்பட்ட ஒரு கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த கடிதத்தில் கோவையில் விநாயகர் சதுர்த்தி விக்ரக வழிபாட்டை மாற்றும் வகையில், 23.8.2017 ம் அன்று கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் 200 வாகனங்களில் சென்று ஜெபம் செய்தோம், 1.9. 2018 அன்று 1000 வாகனங்களில் சென்று பல சபையைச் சேர்ந்த கிருஸ்தவர்கள் ஜெபம் செய்தோம். 2.9.2019 அன்றும் ஜெப யாத்திரை நடந்தது. இப்படி 3 ஆண்டுகளாக கோவையில் ஜெப யாத்திரை நடந்ததன் காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அவரது அனுமதியில்லாமல் சிலைகளை வைக்க முடியாது. இதனால் சிலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இது 3 ஆண்டுகளாக நடந்த ஜெப யாத்திரைகளின் விளைவாகவே நடந்துள்ளது. இந்த ஆண்டு இதை இன்னும் சிறப்பாக நடத்த உங்கள் ஆதரவும், ஒத்துழைப்பும் வேண்டும். இந்த ஆண்டு 10.9.2021 அன்று விநாயகர் சதுர்த்தி வருவதால் அன்றோ அல்லது 9.9.2021, அல்லது 8.9.2021 ஆகிய நாட்களிலோ இதே போன்று ஜெபயாத்திரை நடத்த வேண்டும். கரோனா காலத்தில் இதற்கு நல்ல பலன் கொடுக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி தொண்டர்கள் துடியலூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்து முன்னணி கோவை வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தம்பி சரவணன் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிரியார் டேவிட் இந்த கடிதத்தை அனுப்பியிருந்தது உறுதியானால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் அவர் நடத்தி வரும் கல்வி நிறுவனங்களுக்கான அனுமதியையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இது குறித்து விளக்கம் கேட்க கேட்க செயின்ட் பால் கல்வி நிறுவன தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்ட போது போன் எடுக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here